Wednesday, June 26, 2019


உலகத்தின் முதல் தத்துவ ஞானி சாக்ரடீஸ்

சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு கிரேக்கத்தில், ´ஆதென்ஸ்´ என்ற இடத்தில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். அப்போது உலகில் எந்த மதமும் தோன்றவில்லை . தன் சுயமுயற்சியால் மனித அறிவின் தோற்றம் குறித்த அறிவு, தர்க்க சாஸ்திரம் ஆகிய வற்றில் திறன் பெற்று விளங்கினார் .இவரைப் பற்றி வரலாற்றில் ஒரு மதிப்பிடு உண்டு. “கேள்விக் கேட்கத் தெரிந்த வரலாற்று நாயகன்” என்பார்கள். சொல்லுவதை அப்படியே நம்பிக்கொண்டு, அவை குறித்த தர்க்க விவாதங்கள் எதையும் செய்யாமல், அப்படியென்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கூட்டத்தில் சாக்ரடீஸ் வித்தியாசமாக இருந்தார். ஆனால் , அவர் எதையும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை .
கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையைவிட்டு வெளியேறினார்.  சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.  சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண் டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.  எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.  பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.  ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்  பதில்  சொல்வதை  அவர்  தவிர்த்தார்.
ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.  பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச் செய்த சாக்ரடீஸ், அந்தப்  பிரச்சினையைத்  தீர்ப்பதற்கும் கேள்விகளைக்  கேட்டார்.
இதுபோன்ற செயல்களால் பொது மக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.  இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.  இதென்ன பிரமாதம்! உட்கார்ந்து ஊர் கதை பேசிக்கொண்டு, இடக்கு மடக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பது ஓர் ஆச்சரியமான விஷயமா? என்று நமக்கு தோன்றலாம். இன்றைய மனிதனின் அறிவை விட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் சிந்தனையில் கேள்விகளுக்கோ, சிந்தனைகளுக்கோ இடமில்லை.  அன்றைய மனிதனின் அறிவு அப்படி.
நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, சம்பிரதாயம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். அவரின் பேச்சுக்களும், புதிருக்கான விடைகளையும், நயத்துடன் எடுத்துப் பேசும் போது பொது மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஆதென்ஸ் இளைஞர்களுக்கு சாக்ரடீஸ் ஹீரோவாக இருந்தார். அந்த கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.  சமூக பழக்க வழக்கங்களை ஆராய்வதும், அரசு அமைப்பின் செயல் பாடுகளை விமர்சிப்பதும், எதிர் கேள்வியுமாக இருந்ததோடல்லாம ல், நிறைய விவாதங்களுக்கென நேரம் ஒதுக்கி பேச ஆரம்பித்திருந் தார். அவருடைய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி எப்போதும் இளைஞர்கள் குழுமியிருந்தனர். கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்ததல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது. ஆதென்ஸ் அரசுக்கு இந்த விஷயம் எட்டியது.
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது. அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளை ஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்த னர்.
சாக்ரடீஸ்  தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது  கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ்மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினான்.  இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வரும் கடவுள்களை தூற்றி , ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப்பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் , சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார், புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார் . சாக்ரடீஸ் மிகவும் தீயவர் . இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் .
இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ் , என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை . என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும்தான் என்றார்.  நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதை விட நாத்திகம் என்றார் .
இதன்பின்னர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது.  மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன. நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501 பேர் வாக்குப் பதிவு செய்யத் தொடங்குகின்றனர் .  220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும் , 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர்.  நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக் கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்பதை சாக்ரடீஸே தெரிவிக்கும்படி அறிவித்தனர்.
தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.
ஆனால் தண்டனை வழங் குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்று ம்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலு த்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.  சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.  அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்லவேண்டும் என்று கி.மு. 339 ம் ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர் .
அப்போது, ஆதென்ஸ் நகரில் அப்போலோ என்ற தெய்வத்தின் விழா நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்விழாவில் ´அப்போலோ´ தெய்வம் ஃடெலோஸ் என்றும் ஊரில் இருக்கும் திருத் தலத்திற்கு காணிக்கையாக பல பொருட்களை படகின் மூலம் திருத்தலத்திற்கு கொண்டு போய் காணிக்கையை கொடுத்துவிட்டு, அப்படகு திரும்பி ஆதென்ஸ் நகரத்திற்கு வரும் வரை அந்நகரில் இருந்து யாரும் வெளி ஊர்களுக்கு செல்ல மாட்டார்கள். அரசும் தண்டனைகள் எதுவும் கொடுக்காமல் அவ்விழா நாட்களில் தெய்வத்தின் புனிதத் தன்மையை பாதுகாத்து வருவது ஐதீகமாக இருந்தது. காணிக்கை கொண்டு செல்லும் அப் படகை கூட மிகப் புனிதமாக பாதுகாத்து ´புனிதப் படகு´ என்று வழங்கி வந்தனர் என்றால், ஆதெ ன்ஸ் மக்களின் அவ்விழா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி இருப்பர் என்பதை உணரலாம்.
சாக்ரடீஸிக்கு தண்டனை விதிக்கப் பட்ட போது, அப்போலோ தெய்வத்தின் விழா நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போலோவின் காணிக்கைகளை எடுத்துக் கொண்டு ஃடெலோஸ்க்கு சென்ற புனிதப் படகு இன்னும் ஆதென்ஸிக்கு வரவில்லை. சாக்ரடீஸிக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. புனிதப் படகு சரியான காலப்படி ஆதென்ஸிக்கு வந்து சேர்ந்திருக்கவேண்டும்.  ஆனால் காணவில்லை;  என்னாயிற்று புனிதப்படகுக்கு என்ற கவலை ஒரு பக்கம்.  சரி சாக்ரடீஸை என்ன செய்வது? படகு வரும்வரை தற்காலிகமாக வெளியில் விடலாமா என்று யோசனை வந்தபோது சாக்ரடீஸிக்கு எதிராக இருந்தவர்கள் மறுப்பு தெரிவித்தனர். புனிதப் படகு வரும் வரை தண்டனையை நிறைவேற்ற முடியாவிட்டாலும் சிறையில் அடைத்து வைத்திருந்து புனிதப் படகு வந்த பின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டது.
30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அது வரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடு களைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்துவிட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்கைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.
நீதிமன்ற விசாரணையின் போது, நான் சாவைக்கூட சந்திக்கத் தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.  சாக்ரடீஸ் சிறையில் அடைபட்டு மரண தண்டனையை எதிர் நோக்கி இருந்த காலம். ஒரு நாள் பக்கத்து அறையில் அடைபட்டு இருந்த கைதி ஒருவர் நரம்பு இசைக் கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். அந்த இசையை வெகுவாக ரசித்த சாக்ரடீஸ், அந்த கைதியிடம் சென்று `இந்த வாத்தியத்தை எப்படி இசைப்பது? என எனக்கும் சொல்லிக் கொடுங்கள்’ என்று கேட்டார்.  அந்த கைதிக்கு பயங்கர வியப்பு. `நீங்களோ மரண தண்டனை பெற்றவர்.  விரைவில் உயிரிழக்கப் போகும் நீங்கள் இதைக் கற்றுக் கொள்வதால் என்ன பயன்?’ என்று கேட்டார்.அதற்கு சாக்ரடீஸ், `மேலும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டேன் என்ற திருப்தியுடன் சாகலாம் அல்லவா? அதனால்தான்’ என்றார்.   இதைக் கேட்ட கைதி மீண்டும் வியப்பில் அசந்துபோனார்.
சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு. இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.  சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.  மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தபின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாக்ரடீஸ் பிணைந்து கொண்டார்.  அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை, அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது.  உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.
“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக்கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீ ஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.  இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.  “மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள். அதற்கு, “நீங் கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ். சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.
 நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி  சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.  விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார் அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்கவேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப் பணியாளன்.  கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.  “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு, சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கி னார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.  விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.  “இல்லை” என்றார்  சாக்ரடீஸ்.  சிறிது  நேரத்தில் அவர் விழிகள் மூடின.
 தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது. அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாக்ரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

No comments: