Wednesday, June 26, 2019

காலம் கவர்ந்து சென்ற காணற்கரிய கனவுப் போக்கிஷமாய் - காந்தி

கண்ணீரால் கழுவி கறை யகற்றவொண்ணா கொடுமையின் விலையாய் - காந்தி

திசையறியாப் பெருவழியின் வழித்துணை விண்மீனாய் - காந்தி.

பேத்திகள் மனு அபா
தோள்களில் இருகை சேர்த்து
ஒரு பறவையைப் போன்ற
மெலிந்த மனிதர்
பிர்லா மந்திரிலிருந்து 
வெளியேறி நடக்கிறார்

செயலாளர் பிரிஜ் கிருஷ்ணா தனிச்செயலாளர் கல்யாண் 
பாதுகாப்பு அதிகாரி குருபச்சன் சிங்
பிர்லா குடும்பத்தினர் தொடர
பிரார்த்தனைக்காக செல்லும் 
கனிந்த நடையது

இன்னும் 200 மீட்டர் தூரமிருக்கிறது
அது தன் வாழ்வின் இறுதியை எட்டும் தூரமென அறிந்திருப்பாரோ தேசபிதா

விடுதலை மறுக்கப்பட்டவர்கள்
சாதியால் கசந்து ஒதுக்கப்பட்டவர்கள்
மதவெறியால் சிதைந்தவர்களென
எல்லோருக்காகவும் 
எத்தனை தூரம் யாத்திரை போனவர்
இன்னுமவர் நடக்க வேண்டிய
தூரம் 200 மீ மட்டுமே

மோகன்தாஸ் கரம்சந்த்தாக
போர்பந்தரில் தொடங்கிய பயணம் 

மும்பை, டர்பன், பீட்டர்மரிட்ஸ்பெர்க், ஜோகன்னஸ்பர்க், பீனிக்ஸ்
என வளர்ந்த பயணம்

டால்ஸ்டாய் ஃபார்ம் 
சாம்பரான், சபர்மதி, 
எரவாடா, தண்டி,
கின்ஸ்லே ஹால்,
செயின்ட் தாமஸ் 
சேவாகிராமம்,
ஆகாகான் அரண்மனை,
நவகாளி, கல்கத்தா, டில்லி
என தொடர்ந்த பயணம்

இதோ, பிர்லா ஹவுசில் 
முடிந்துவிடுமென யாரறிவார்?

இந்தியாவின் பாதையில்
தீவினை குறுக்கே வந்தது போல்
மகாத்மாவின் பாதம் பணிந்தான்
37 வயது இளைஞன்

எழுந்தவன் 
வணக்கம் சொல்கிறான்
தேசபிதாவுக்கு

அவனது கைகளில் பளபளக்கிறது
இத்தாலி தேசத்து பெரட்டா பிஸ்டல்

முன்பு ஹிட்லரிடமிருந்த
முன்பு முசோலினியிடமிருந்த
அதே துப்பாக்கி
சாவர்க்கரும்
கேசவ பலிராம் ஹெட்கேவரும்
ஆசிர்வதித்துக் கொடுத்த 
பிரசாதம்போல 
இப்போதது
நாதுராம் கோட்சேயிடமிருக்கிறது

வெள்ளைக்காரர்கள் காத்தளித்த விலை மதிப்பற்ற உயிரை 
அதன் மூன்று குண்டுகள் 
பூவைப் போல கொய்தபோது
என்றுமே கழுவ முடியாத கரையாய் 
காந்தி மகானின் குருதி 
இந்நிலத்தில் பரவியது

இந்தியக் கண்ணீரின் ஒலி இமையமலை
விந்திய சாத்பூரா மலை
வங்கம் அரபி இந்தியக் கடலென மோதி எதிரொலித்தது

மருத்துவர் டி.பி.பார்க்கவா 
பாபுஜியின் மரணத்தை 
உறுதிசெய்தபோது
உலகத்தின் முன் 
தந்தையற்ற பிள்ளையாய் 
தலை கவிழ்ந்து 
நின்றது இந்தியா

இந்திய அரசியலின் 
முக்கிய தருணத்தில் 
செல்வமெலாம் துறந்து 
எந்த மகானின் கை பிடித்து நடந்தாரோ
அவரது ரத்தம் தோய்ந்த உடையில் தன் தாமரை வதனத்தைப் புதைத்து 
ஒரு குழந்தையைப் போல்தேம்பி அழுதார் நேரு

மறுநாள் உலகமே 
இவ்வுலகின் கடைசி 
அஹிம்சையாளனைக் காண 
இந்தியாவுக்கு வந்தது

வாழ் நாளெலாம் 
நாற்காலியை விரும்பாத 
அந்த எளிய மனிதனின் உடலை 
முப்படைகள் அணிவகுக்க
ராணுவ வண்டி இழுத்துச் சென்றது

இரண்டுமைல் நீளம் 
பதினைந்து லட்சம் மனிதர்கள் 
கண்ணீர் பூக்களை உதிர்த்து 
அஞ்சலி செலுத்தி அழுதனர்

யமுனைக்கரையில் 
அடிமைகளின் வெயிலழித்த 
மாமனிதரின் சிதையை
மகன் ராமதாஸ் எரியூட்ட 

உலகில் ஆழிக்க முடியாத 
வரலாற்றை எழுதிய 
அவ்வுடலை 14 மணிநேரம் 
தீயின் நாக்குகள்
தின்று தீர்த்தன

'மகாத்மா அமரரானா்!'
என்ற முழக்கம் இந்தியாவின் எண் திசைகளிலிருந்தும் 
எழுந்து வந்தது

மறுநாள் அஸ்த்தியை சேகரித்தபோது மதவெறியின் தீராத வெஞ்சினத்தில் 
வெந்து தணிந்திருந்ததொரு குண்டு

இப்பேருலகுக்கு 
உண்மையான ஆன்மீக அரசியலை கற்பித்தவரின் சாம்பலை 
இந்தியாவில் மட்டுமல்ல

பர்மா இலங்கை 
மலேயா திபெத்தென
எங்கும் அமைதியின் 
விதைகளாய்த் தூவினார்கள்

நமது வாழ்வின் விளக்கு 
அணையவில்லை 
அது மேலும் பல ஆண்டுகள் 
இத் தேசத்திற்கு
ஒளி காட்டுமென 
ஆற்றுப்படுத்தினார் நேரு

புத்தரோடு இணைத்து 
காந்தியைப் பேசியது உலகு

"அளவுக்கு மீறி நல்லவராக 
இருப்பதுகூட கொடியதோ"வென
அய்யமெழுப்பிய பெர்னாட் ஷா 
இந்தியாவை 
காந்தி நாடென மகிழ்ந்தார்!

ஆனாலும், நண்பர்களே!

கோட்சே கல்லறையில் 
தூக்கமின்றி புரண்டு படுக்கிறான்

ஆவனது பெரட்டாவில் 
இன்னும் நான்கு தோட்டாக்கள் மீதமிருக்கின்றன!

No comments: