Sunday, November 22, 2009

என் கிராமத்து நினைவுகள்

இன்றைய பரபரப்பும், வேகமும் நிறைந்த சமூகச் சூழலில், இயந்திரத் தனமான நகர்புற வாழ்க்கைமுறை, நம் மன உணர்வுகளின் நுட்பத்தை மழுங்கடித்துக்கொண்டிருக்கி றது. இயல்பாய் நமக்குள் இருக்கும் மென்னுணர்வுகள், நகர்ப்புற காங்ரீட் சமூகத்தின் காலடியில் மிதிபட்டழிகிறது. பரபரப்பும் வேகமும், நம் புன்னகையையும், மெல்லியல்புகளையும் பறித்துக்கொண்டு பனத்தைப் பண்டமாற்றுகிறது. என் கல்லூரிப் பிராயம்வரை எனக்குள் இருந்த கிராமிய கற்பு கலைபடவில்லை. கல்லூரியில் காலடிவைத்தபோதுதான் எங்கள் கிராமத்தின் அருகாமை நகரமே எனக்கு அறிமுகமானது. படிப்பை முடித்து பணி தேடி முதன் முதலில் பட்டினம் வந்தபோது அது என்னை பரவசப்படுத்துவதற்கு பதில் பயமுறுத்தியது. இருபது வருடங்களுக்குமுன் நான் பார்த்த சென்னை நகரமே இன்று கானாமல்போய், கார் காலக் காலையில் கிளம்பும் புற்றீசல்போல் காங்கிரீட் காடாய் கிளைத்திருக்கிறது. நான் முதலில் வந்திறங்கிய புற நகர் பகுதியே, புதிதாய் தன்னை முகமாற்றிக்கொண்டு முறைக்கிறது. நகரப் பேருந்து அல்லது மின்சார இரயில் பயணம், கணிப்பொறியில் பணி, கையேந்திபவனில் களைப்பாற்றல், கைப் பேசியில் மட்டுமே கணவனும் மனைவியும் பேச நேரம் என, நம் அன்றாட வாழ்க்கை, அல்லாடும் வாழ்க்கையாகிப் போனதால், சக மனிதனோடு சாதாரணமாய் பேசக்கூட நேரமின்றி, அசாதரணமானவர்களாய் நாம் பாறிக்கொண்டிருக்கிறோம். இருபது வருடங்களாகியும், எனது கிராமத்து வேர்களை என்னால் அறுத்தெரிய முடியவில்லை. இத்தனைக்கும் நானிருந்த கிராமத்தில் எனக்கென்று எதுவுமே இல்லாதிருந்தும், அதன் மணம் இன்றும் நாசிகளில் நிறைந்திருக்கிறது. ஏதோ சொல்லமுடியாத காரணங்களினால் என் மனம் ஆயாசப்பட்ட எத்தனையோமுறை, என் கிராமத்து நாட்களை நினைத்து அழுதிருக்கிறேன். சிறு பிள்ளையாகவே அந்த கிராமத்தில் இருந்திருக்கமாட்டோமா என்று மனம் இன்றும்கூட ஏங்குகிறது. என் பிள்ளைப் பிராயத்து நிகழ்வுகள் இன்றும் கண்முன் காட்சியாய் விரிகிறது. அதை வரும் நாட்களில் இங்கே பதிவு செய்வதின்மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். மீண்டும் சந்திப்போம்.

வீரவல்லி.

Sunday, November 8, 2009

மீண்டும் உங்களிடம்

அன்பனவர்களே,

சற்றேறக்குறைய இரண்டு வருடங்களுக்குப் பின் நினைவலையில் உங்களுடன் நான். காலத்தின் கைப்பாவையாய் நான் காற்றில் கலந்து கால் பதிக்க மறந்த கடந்த காலத்தைப்பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்வதில்லை என் நோக்கம். வீனில் கழித்த காலத்துக்கும் சேர்த்து, வரும் நாட்களில் என் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவே மீண்டும் இந்த புது அறிமுகம். இனி தொடர்ந்து சந்திப்போம்.

அன்பன்,

வீரவல்லி.