Tuesday, January 1, 2008

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டை வரவேற்பதில், கொண்டாடுவதில், சமீப வருடங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பயமுறுத்துவதாகவும் கவலைகொள்ள வைப்பதாகவும் உள்ளது. சந்தைப் பொருளாதாரம் சாதாரண மக்களின் கலாச்சார மதிப்பீடுகளின் ஆணிவேரையே அசைத்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. நள்ளிரவுக் கேளிக்கை விருந்துகள், நடன நிகழ்ச்சிகள், மதுபான விருந்துகள் என்று தொடங்கி, நுகர்வோர் சந்தையில் தள்ளுபடி விற்பனை, வழிபாட்டுத்தலங்களில் நள்ளிரவு சிறப்புப் பூசைகள் என்று பன்முக பரிமாணத்துடன் பிறக்கின்ற ஒவ்வொரு புது வருடமும் ஏற்படுத்துகிற ஆரவாரத்தில், எதற்க்கும் வக்கற்ற ஏழைமக்களின் பசி முனகல்கள் யாருக்குமே கேட்பதில்லை.

சமீபத்திய தகவல் தொழில்நுட்பச் சந்தையின் அபரிமிதமான வளர்ச்சி, அதையொட்டி அதில் பணி புரிகிறவர்கள் வாங்குகிற சம்பளம், இந்தப் புதுவருடக் கொண்டாடங்களின் எல்லைகளை மேலும் விஸ்தரித்திருக்கிறது. இந்நிறுவனங்களில் பணிபுரியும் இருபாலரிடையே, நாகரீகம் என்கிற பெயரில் ஏற்பட்டிருக்கிற கலாச்சாரச் சரிவு , இதுபோன்ற கொண்டாட்டங்களில் அப்பட்டமான வரம்பு மீறல்களாக வெளிப்படுகிறது.

இந்தக் கொண்டாட்டங்களை நடத்துகிற ஹோட்டல்கள், ஹாலிடே ரிஸார்ட்கள் மற்றும் தனியார் க்ளப்கள், செய்தித் தாள்களில் தருகிற விளம்பரங்களே இளைஞர்கள் மனதில் வெறியேற்றக்கூடியதாய் இருக்கிறது. இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள முன்பதிவு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடுகிறது என்றால், இளைஞர்கள் மத்தியில் இது ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தை நாம் உணரலாம்.

புதுவருடக் கொண்டாட்டங்களையொட்டி, காவல் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்த்தால், ஏதோ போர் ஒத்திகை போல உள்ளது. இளைஞர்களின் புது வருட ஆரம்பத்தையொட்டிய ஆரவாரங்களை காசாக்கும் நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றில், இந்தப் புது வருடம் மூன்று இளைஞர்களின் உயிரைக் காவு வாங்கிக்கொண்டு பிறந்திருக்கிறது. ஏதோ ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன்ஒருவனும், பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கும் இரண்டு மாண்வர்களும், புத்தாண்டை வரவேற்கும் ஆர்வத்தில், நீச்சல் குளத்தின்மேல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அளவுக்கதிகமானோர் நடனமாடியதால், மேடை உடைந்து விழுந்ததில் பலியாகியிருக்கின்றனர்.

இதில் யாரை, எதைக் குறை கூறுவது என்று தெரியவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி கவலைப்படாமல், சூழ்நிலையைக் காசாக்கும் ஆர்வத்தில், நீச்சல் குளத்தின் மேல் மேடையமைத்த, ஹோட்டல் நிர்வாகத்தைக் குறை கூறுவதா, எந்த சந்தர்ப்பத்தையும் கேளிக்கை வாய்ப்பாக்கி, அதற்கு ஏதுவான இடங்களை தேடி அலையும், இன்றைய இளைஞர்களைக் குறை கூறுவதா? இந்த நிகழ்வை, ஏதோ எதேச்சையாய் நடந்த விபத்து என்று ஒதுக்கித் தள்ள, மனம் மறுக்கிறது. எத்தனையோ கனவுகளோடு, எதிர்பார்ப்புகளோடு, இவர்களின் பெற்றோர்கள் இவர்களை நம்பியிருக்கையில், எந்தவித பொறுப்புமின்றி, மேலை நாகரீகத்தின் பிரதிநிதிகளாகத் தங்களை பாவித்துக்கொண்டு, இன்றைய இளைஞர்கள், மனம் போன போக்கில் நடப்பது, அதற்கு வாய்ப்பாக தன்னுடைய வேலைவாய்ப்பை பயன்படுத்துவது, கவலைக்குரியது.

கொண்டாட்டங்கள் தவறில்லை, கேளிக்கைகளுக்கு வரையரையுண்டு, நமது கலாச்சாரத் தொன்மங்களைக் கரைத்துக்கொண்டு, கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் என்ற பெயரால், இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிற கலாச்சார சரிவு, எதிற்கால சமூகச் சூழல் குறித்த பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த பயம் அதீதமானது, தேவையற்றது, மாறிய சூழலில் இது போன்ற நிகழ்வுகள் சாதாரணம், என்று ஒதுக்கித் தள்ளுபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், வரலாறுதான் நமக்கான படிப்பினை, பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடக்கும் இன்றைய மேலைச் சமூகம்தான் நம் கண் முன் இருக்கும்உதாரணம்.
புதிய பொருளாதாரக் கொள்கை, அதன் மூலம் பெருகும் அன்னியச் செலாவணி மட்டும்தான் அரசின் குறிக்கோளாகிப்போனதால், பன்னாட்டு நிறுவனங்களின், காலனி(ணி)யாக இந்தியா மாறிவருவதைப் பற்றி கவலைப்பட யாருமில்லை. மலிவாகக் கிடைக்கும் இந்திய உழைப்பைச் சுரண்டுவதோடு, நமது கலாச்சார மரபுகளையும் காவு கேட்கும் சந்தைப் பொருளாதாரத்திற்கு கட்டியம் கூறும் இன்றைய சமூகத்தின் பிரதிநிதிகளாக இளைஞர்கள் மாறி வருவது வருத்தத்திற்குரியது. ஆனாலும், எதிர்காலம் குறித்த எண்ணம் வரும்போதெல்லம் இளைஞர்களைத்தான் நம்பவேண்டியிருக்கிறது, என்ன செய்ய?


- வீரவல்லி.