Wednesday, December 18, 2019


`Holy Land' சாவர்க்கர்..! - ராகுல் காந்தியுடன் பி.ஜே.பி-யை முட்டி மோத வைக்கும் சாவர்க்கர் யார்?

Vikatan Correspondent

வன்கொடுமை தொடர்பான கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று பி.ஜே.பி-யினர் கொந்தளித்தபோது, `நான் ராகுல், சாவர்க்கர் அல்ல' என்றார். அதைக் கண்டித்த மகாராஷ்ட்ரா பி.ஜே.பி, சட்டமன்றத்துக்கு `நான் சாவர்க்கர்' என்று அச்சிடப்பட்ட தொப்பி அணிந்து எதிர்ப்பு தெரிவித்தது.
அமித் ஷாவின் `சாவர்க்கர் பாசம்' அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர்.
ஆக, விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது யாருக்காக என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது அதிஅவசியமாகிறது. இல்லையென்றால், நாளைக்கு ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் சாவர்க்கர் சிரிப்பதை, வரும் தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க நேரிடும். அமித் ஷா வேறு `வரலாற்றை மாற்றி எழுதுவோம்என்று பீதி கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இப்போது பேசுவதுதான் சரி!
சாவர்க்கர் ஒரு சிந்தனைவாதி என்பதில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அவர் சிந்தனைவாதிதான்! ஆனால், அவரது சிந்தனைகள் எதை நோக்கி இருந்தன என்பதுதான் முக்கியமானது. அதையே அதிகம் கவனத்தில் எடுத்து விவாதிக்க வேண்டும். அவரது சிந்தனை என்ன. இந்து ராஷ்டிரம்தான்! அந்த இந்து ராஷ்டிரம் எப்படியிருக்கும் அவரே அதை விவரிக்கிறார்... `எவரெல்லாம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையோ, அவர்களெல்லாம் இந்தியர்களும் அல்ல. ஒரு தேசியத்துக்கு கொடுக்கப்படும் `Motherland, Fatherland' என்ற கருத்துரு வாக்கங்களைத் தாண்டி, `Holy land' என்ற கருத்துருவாக்கத்தை கொண்டுவந்து வைக்கிறார் சாவர்க்கர். அவரது அந்தத் தத்துவத்தின்படி, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இந்தியர்கள் அல்லர். ஏனென்றால், அவர்களின் புண்ணியபூமி அரேபியாவிலும் பாலஸ்தீனத்திலும் இருக்கிறது என்பது அவரது வாதம். இதைத்தான் 1905 தொடங்கி 1966 வரை வெவ்வேறு வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தார் அவர். அதாவது, அவர் மரணத்தைத் தழுவும் வரை அதிலிருந்து மாறவே இல்லை. கடைசிக்காலங்களில், `இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்து பெண்களைச் சூறையாடியதைப் போலவே, இந்துக்கள் இஸ்லாமியப் பெண்களைச் சூறையாட வேண்டும்என்று சொல்லும் அளவுக்குக்கூட அவர் இறங்கியிருக்கிறார். மத அடிப்படைவாதத்தில் அவரது மனம் எந்த அளவுக்கு கெட்டித்தட்டிப் போயிருந்ததது என்பதற்கான உதாரணம், அந்த வார்த்தைகள்.
ஜனநாயக அரசியலில் ஒரு பாலபாடம் உண்டு. அதாவது, ‘அனைவரையும் உள்ளடக்கும் அரசியலுக்கு (Inclusive Politics) எவரெல்லாம் அச்சுறுத்தலாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஜனநாயகத்துக்கும் எதிராகவே நிற்கிறார்கள்என்பதே, அது. சாவர்க்கர், அனைவரையும் உள்ளடக்கும் அரசியலுக்கு எதிராக நின்றவர். இங்கேயே பிறந்து, இங்கேயே வாழ்ந்து வரும் மாற்று மதத்தவர்களை `Others' என்று கூசாமல் சொன்னவர் அவர். `அவர்களுக்கு எந்த விதத்திலும் இந்த நாடு சொந்தமில்லை' என்ற கருத்தாக்கத்தை, சாவர்க்கரின் எழுத்துகளில் திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது. ஆகவே, அவர் இந்தியாவின் ஜனநாயகப் பண்புக்கு முற்றிலும் எதிரானவர்! இப்படிப்பட்டவருக்கு, அகிலத்தின் மாபெரும் ஜனநாயக நாட்டினரான நாம், பாரத ரத்னா கொடுத்து அழகுபார்க்கப் போகிறோமா? அப்படிச் செய்தால், நமக்கு அடுத்து வரும் தலைமுறையினர் நம்மைப் பற்றி என்ன மதிப்பு வைத்திருப்பார்கள்?
காந்தி 'Power to people' என்று சொன்னார் என்றால், சாவர்க்கர் அதிலிருந்து அப்படியே வேறுபட்டு ‘Power over people’ என்று சொன்னார். அதாவது, மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை அப்பட்டமாக ஆதரித்தவர் சாவர்க்கர்.
போதாக்குறைக்கு, இந்தியாவை இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ராணுவ தேசமாக உருவகித்தார் சாவர்க்கர். காந்தி 'Power to people' என்று சொன்னார். சாவர்க்கர் அதிலிருந்து அப்படியே வேறுபட்டு `Power over people’ என்று சொன்னார். அதாவது, மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை அப்பட்டமாக ஆதரித்தவர் சாவர்க்கர். அதனால்தான் அவருக்கு ஜெர்மனி பிடித்தது. பின்னாளில், இஸ்ரேலும் அவரது மனதைக் கவர்ந்ததற்குக் காரணம் அதுவே. இந்தியாவை காலனியாதிக்கத்தின் கண்கள் கொண்டு பார்த்தவர் சாவர்க்கர்என்று சில ஆய்வாளர்கள் சொல்வது, அதனாலேயே!
இந்துத்துவத்தை கண்டுபிடித்தவர் சாவர்க்கர்தான்! விவேகானந்தரும் அரவிந்தரும் திலகரும் `இந்துயிஸம் (Hinduism)’ என்று பேசியதை, `இந்துத்துவம் (Hindutva)’ என்ற இடத்துக்கு நகர்த்தியவர் சாவர்க்கர். இந்துயிஸத்தை, இந்துமதத்தைப் பின்பற்றுவது, அதைப் பற்றி பேசுவது, அதன் தத்துவங்களை பரப்புவது என்று வரையறுக்கலாம். ஆனால், இந்துத்துவம் அப்படியல்ல. அது, இந்துக்களை ஒருங்கிணைப்பது, ஒருங்கிணைத்து ஓர் இந்து சமுதாயத்தைக் கட்டமைப்பது! அதாவது, இந்துயிஸம் இந்துக்களை ஒரு மதமாகப் பார்த்தால், இந்துத்துவா ஓர் இனமாகப் பார்க்கும். அந்த இனத்தின் ஆதிக்கத்துக்குள் அது தேசத்தைக் கொண்டு வரும். அந்தத் தேசத்தில், சிறுபான்மை இனத்தவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அவர்களுக்கென்று எந்த உரிமையும் இருக்காது. இதை நோக்கியே, அந்த 'Holy land' என்ற பதத்தை வெகு சாதுரியமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.
இந்தியாவை முழுவதுமாக `இந்துமயமாக்குவதேசாவர்க்கரின் நோக்கம். அதற்காக, படை உருவாக்குவது, அந்தப் படையை மக்கள் மேல் செலுத்தி அவர்களை ஆளும் அதிகாரத்தை அடைவது, அந்த அதிகாரத்தின் வழியே, நாடு முழுவதும் ஒற்றைத்தன்மையைக் கொண்டுவருவது என்று, தெளிவாக வரைபடம் வரைகிறார் சாவர்க்கர். `Hinduise all politics, Militarize Hinduism' என்ற பதத்தை அவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த ஒருங்கிணைத்தலை செய்ய அவருக்கு ஒரு எதிர்த்தரப்பு தேவைப்பட்டது. அதனால்தான், இந்து அல்லாதவர்களை, அதாவது இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை ‘Others' என்று அழைத்து, `Self' எனப்படும் இந்துக்களின் எதிரிகளாகக் கட்டமைக்கிறார் அவர். ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களைக்கூட அவர் ஓரமாகவே நிறுத்துகிறார். அதுவும், அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பௌத்தத்தை, இஸ்லாம் கிறிஸ்துவத்துக்கு இணையாக வெறுக்கிறார். அவருடைய, 'Hindutva : Who is a Hindu' புத்தகம், ஏறக்குறைய ஹிட்லரின் 'Mein kampf' புத்தகத்துக்கு இணையானது!
சாவர்க்கரின் இந்து ராஜ்ஜியத்தின் இன்னொரு ஆபத்து, அது இந்து சமுதாயத்தையே பிளவுபடுத்திப் பார்க்கிறது என்பது. இதற்கு, சாவர்க்கர் அவ்வளவு பெரிய சனாதனவாதியும் அல்ல. கடவுள் நம்பிக்கையும்கூட அவருக்கு குறைவுதான். Agnostic வகையைச் சேர்ந்தவர். அவரின் மனைவியும் மகனும் இறந்தபோதுகூட, அவர் மதச்சடங்குகள் ஏதும் செய்யவில்லை. ஆனால், சாவர்க்கர் கோயில்கள் கட்ட குரல் கொடுத்திருக்கிறார். 1939-ல் டெல்லியில் சிவன் கோயில் ஒன்று இடிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தவர்களுள் சாவர்க்கர் முக்கியமானவர். அதில் கிடைத்த வெற்றியைப் பெருமளவில் கொண்டாடியவர் சாவர்க்கர். `இது போன்ற நடவடிக்கைகளே இந்து மக்களை ஒருங்கிணைக்கும்என்று அருகிலிருப்பவர்களிடம் சொல்லி மகிழ்கிறார். கடவுளையே வணங்காதவர், கோயில் கட்டுமானங்களை ஏன் ஆதரித்தார் என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். காரணம் அதுவேதான். அது, அவருக்கு ஓர் அரசியல் ஆயுதம்! இந்துத்துவத்தின் தந்திரமே அதுதான். அதற்கு, மதம் என்பது மக்களை அடக்கியாளும் ஓர் அரசியல் கருவி மட்டுமே. அதைக் கடந்து யோசிப்பதற்கு இந்துத்துவத்தில் எந்த இடத்தையும் ஏற்படுத்தி வைக்கவில்லை சாவர்க்கர்.
"சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள். அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்த சூழ்நிலையிலும், அரசுக்கு சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்ட வில்லையென்றால்,  இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்" - சாவர்க்கர்
சாவர்க்கரின் இந்து சமுதாயமும் எப்படிப்பட்டது தெரியுமா? உயர்சாதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவே அது இருக்கும். ஏனென்றால், இந்து சமுதாயத்தின் அடித்தளமாக `வர்ணப் பாகுபாடுஇருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல் கிறார் சாவர்க்கர். அந்த இந்து சமுதாயத்தின் முக்கிய மொழிகளும்கூட இந்தியும் சம்ஸ்கிருதமும்தான். கடவுளர்களும்கூட கிருஷ்ணனும் ராமனுமே. `பழங்குடி மக்கள் தங்களின் குலதெய்வத்தை துறந்துவிட்டு, ராமவழிபாட்டுக்கு மாற வேண்டும்என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் சாவர்க்கர். `வறண்டு கிடந்த இந்து மதத்தை, சாதிதான் செழிப்பாக்கியதுஎன்று சொல்லுபவராகவும் இருந்தார் அவர். அவரது தீண்டாமை ஒழிப்பு முழக்கங்கள் எல்லாமே, வெறும் பாவ்லா மட்டுமே. ஆங்கிலத்தில் `Escapism' என்று அதைச் சொல்வார்கள். வெற்று, தப்பித்தல்வாதம்! இது போதாதென்று, கறுப்பு நிறத்தவர்களை இந்துக்களாக ஏற்றுக்கொள்வதிலும் அவருக்கு தயக்கம் இருந்தது. இந்து பெண்களைப் பற்றியும் எங்கும் பெரிதாகப் பேசுவதில்லை சாவர்க்கர். `அவர்களின் கடமை அடுப்பங்கறை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுதல் மட்டுமேஎன்பது சாவர்க்கர் கொண்டிருந்த எண்ணம். இத்தகையவரைத்தான், தனது அணிகலனாக இந்தியத் தாய் சூட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இவற்றையெல்லாம் விலக்கிவிட்டுப் பார்த்தாலும், அவரை அங்கீகரிப்பதற்கு மூன்று இடையூறுகள் இருக்கின்றன. முதலாவது, அடிமைப்படுத்திய ஆங்கிலேயனிடமே `நான் உங்கள் சேவகன்என்று அவர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். இரண்டாவது, `இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றனஎன்று ஜின்னாவுக்கு பாயின்ட் எடுத்துக்கொடுத்ததும்கூட அவரேதான். மூன்றாவதுதான் மிக முக்கியமானது. அதாவது, தேசப்பிதா காந்தி கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
1911-ம் ஆண்டு ஜூன் மாதம், அந்தமான் செல்லுலார் சிறையை வந்தடைகிறார் சாவர்க்கர். நாசிக் மாவட்ட நீதிபதி ஜாக்சன் கொலைக்கு, அவர் தூண்டுதலாக இருந்தார் என்பது வழக்கு. அப்போது, `ஆபத்தான கைதிஎன்று அவருக்கு அடையாளம் இடப்பட்டது உண்மைதான். `D' என்பது அந்த கோட்வேர்ட். ஆனால், சாவர்க்கர் ஒன்றும் அவ்வளவு ஆபத்தானவராக ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை என்பதுதான் முரண்பாடு. சாவர்க்கர் 1924-க்கு முன்பு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதுதானே, நாம் அறிந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார் சாவர்க்கர். 1911-லேயே அவர் ஒரு கடிதம் எழுதினார். அது இப்போது கிடைப்பதில்லை. ஆனால், 1913 அவர் அனுப்பிய மற்றொரு கடிதத்தில் அந்த முந்தைய கடிதத்தைக் குறிப்பிடுகிறார். கடிதத்தில், `அடிபணிதல்வாசகங்கள் பளிச்சென்று இருக்கின்றன. `To : The home member of the government of India' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், `சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள். அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்கு சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்ட வில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்...’ என்று சொல்கிறார் சாவர்க்கர்.
"நான் ராகுல், சாவர்க்கர் இல்லை" என ராகுல் காந்தி சொன்னது ஏன்?
சாவர்க்கரைப் போலவே, பகத்சிங்கும் ஒரு கடிதத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எழுதினார். லாகூர் சிறையில் இருந்து 1931-ம் ஆண்டு அவர் அனுப்பிய கடிதம் அது. அதில், `உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு, எங்களை போர்க்கைதிகளாக வகைப்படுத்துகிறது. ஆம், நாங்கள் போர்க்கைதிகள்தான். ஆகவே, எங்களை நீங்கள் தூக்கிலிடக்கூடாது. மாறாக, துப்பாக்கித் தோட்டாக்களால் சுட வேண்டும்என்று, அறிவித்தான் அந்த 23 வயது இளைஞன். அடுத்து, `இந்தப் போர் தொடரும்என்று அறிவித்துவிட்டு, `எங்களைக் கொல்லப்போகும் ராணுவ அதிகாரிகளை எப்போது அனுப்புகிறீர்கள்என்ற கேள்வியோடு அந்தக் கடிதத்தை முடிக்கிறார் அவர். கடிதத்தில் ஓர் இடத்தில், குறித்துக்கொள்ளுங்கள். முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நாள்கள் எண்ணப்படுகின்றன. ஒருநாள் இங்கு, சோசியலிஸ சமுதாயம் மலரும்என்று கர்ஜிக்கிறான், அந்த மாவீரன்.
கடிதம் முழுவதுமே, அப்படித்தான். அதிகமும் தேசத்தைப் பற்றித்தான் பேசுகிறார் பகத் சிங். இதற்கு லாகூர் சிறையும் ஒன்றும் சொகுசு சிறையல்ல. ஆனாலும், பகத்சிங் அதைப் பற்றியெல்லாம் கவலைகொள்வதில்லை. உதிரம் முழுவதும் விடுதலை வேட்கை ஓடும் ஒருவனின் வார்த்தைகள் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கின்றன பகத் சிங்கின் வார்த்தைகள். உறைவிட்டெழும் வாளென, நாண் தொட்டு புறப்படும் அம்பென பாய்கின்றன, அவன் சொற்கள்! அப்படியே சாவர்க்கரின் வார்த்தைகளையும் பார்க்கவும். `நான் இப்படியெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறேன்... கருணை காட்டுங்கள்... நல்ல படியாக நடந்துகொள்வேன்என்றெல்லாம் அந்நியனிடம் பணிகிறார் சாவர்க்கர். இவர் எப்படி பாரதத்தின் ரத்தினம் ஆவார்? `நீங்கள் என்னை விடுவித்தால், இந்தியாவில் உங்கள் புகழ் பெருகும்என்றெல்லாம்கூட ஆங்கிலேயர்களிடம் உருகியிருக்கிறார் சாவர்க்கர்.
1924-ல் அவரது விடுதலைக்குக் காரணமான மன்னிப்புக் கடிதம், இன்னும் உக்கிரமானது. `என்னை விடுவித்தால் நான் உங்களுக்கு நல்ல சேவகனாக இருப்பேன்என்று அதில் பட்டயமே எழுதித் தருகிறார் சாவர்க்கர். `நான் எவ்வளவு நன்றாக நடந்துகொள்ள முடியுமோ, அவ்வளவு நன்றாக நடந்துகொள்கிறேன்...’ என்றும்கூட வாக்குறுதி அளிக்கிறார். வெளிவந்த பின், அவர் அதைத்தான் செய்தார். சிறையிலிருந்து வெளியேவந்த பிறகுதான் `Hindutva : Who is a Hindu' புத்தகத்தையே எழுதினார். அது, இந்தியாவை பிரித்தாளத் துடித்துக்கொண்டி ருந்த பிரிட்டிஷாருக்கு ஒரு கையேடாகவே உதவியது. ஜின்னாவுக்கும் அது ரெஃப்ரன்ஸாக மாறியது. 1926-ல் சாவர்க்கரைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் அது. பெயர், `Life of Barrister Savarkar'. அதை எழுதியவரின் பெயர் சித்திரகுப்தன். விநோதம் என்னவென்றால், அந்த சித்திரகுப்தனே சாவர்க்கர்தான். ஏனென்றால், அந்தச் சித்திரகுப்தன் அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி எந்தப் புத்தகமுமே எழுதவில்லை. எழுதிய ஒரே புத்தகம் சாவர்க்கருடைய வரலாறு மட்டும்தான். சுயவரலாறு எல்லோரும் எழுதுவதுதான். ஆனால், அதை அவர்களின் பெயரில் எழுதுவது அல்லவா உலக வழக்கம்! தனது படத்தை தானே வணங்கிய நித்யானந்தாவைப்போல, தன்னைப் பற்றி தானே புகழ்ந்து எழுதியவர் சாவர்க்கர். இதுதான் அவரது நேர்மை!
`அவர் ஏன் மன்னிப்புக் கேட்டார் தெரியுமா? தேசப் பணிக்காகவே அதைச் செய்தார்என்கிறார்கள் சிலர். அப்படி மன்னிப்புக் கேட்டு வெளியேவந்து சாவர்க்கர் செய்த மாற்றங்கள் என்று எதுவுமில்லை. ஆங்கிலேயனை எதிர்க்கும் எந்தச் செயல்களையுமே அவர் முழுவீச்சில் செய்யவும் இல்லை. மழைக்கு பயந்து எலி வளைக்குள் ஒடுங்கிக்கொள்வதைப்போல, ஒடுங்கிக் கொண்டார். ஆங்கிலேயன் இந்தியாவைவிட்டு விலகும் வரை, அவருக்கு மழைக்காலம் போகவே இல்லை. காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தபோது, அதிலிருந்து விவரமாக விலகிநின்றவர் சாவர்க்கர். இப்படி இன்னும் எத்தனையோ சொல்லலாம்.
`காந்தி 4 வருடங்கள்தான் சிறையில் இருந்தார். ஆனால், சாவர்க்கர் 14 வருடங்கள் சிறையில் இருந்தார். அப்படியென்றால், யார் பெரிய தேசபக்தர்என்றும் கேட்கிறார்கள். இதில் இருக்கும் தகவல் சரி, ஆனால், பார்வை தவறு. காந்தி ஒரே முறையாக 4 வருடங்கள் சிறையில் இருக்கவில்லை. மொத்தம் பதினொரு முறை அவர் சிறைக்குச் சென்று திரும்பினார். தென்னாப்பிரிக்கச் சிறைகளும் அதில் அடக்கம். ஒன்றை நோக்கவும். ஒவ்வொரு முறையும் ஒரு போராட்டம், அதில் விசாரணை, அதற்குப் பிறகு தண்டனை என்று சிறை சென்றவர் அவர். அவர் சிறை சென்றபோதெல்லாம், மக்கள் கொதித்தெழுந்தார்கள். காந்தியை விடுவிக்கக்கோரி போராடினார்கள். அவரும் தன்பங்குக்கு சிறை சீர்திருத்தம் என்று களமிறங்கினார். ஆக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கண்முன்னால் இருந்த ஒரே வழி, காந்தியை விடுவிப்பது மட்டும்தான். ஒரு தடவை, நான்கு நாள்களுக்குள் மூன்றுமுறை காந்தி கைது செய்யப்பட்டு திரும்பத் திரும்ப விடுவிக்கப்பட்டிருக்கிறார். அந்தளவுக்கு ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்குபவராக இருந்திருக்கிறார் காந்தி! தென்னாப்பிரிக்காவில் காந்தி சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்தபோது, காந்தியை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் வாசலில் திரண்டு நின்றார்கள் என்பது வரலாறு. அவர் பின்னால் எப்போதுமே மக்கள் இருந்தார்கள். ஏனென்றால், அவர், அவர்களின் மனங்களில் இருந்தார். 75 வயதிலும்கூட சிறைக்குச் செல்லும் துணிவை, அவருக்கு அளித்தது அந்த மக்களின் அன்புதான்!
ஆனால், சாவர்க்கர் விவகாரம் அப்படியல்ல. அவருக்காக யாரும் இங்கே கொதித்தெழவில்லை. சாவர்க்கரை விடுவிக்கக்கோரி ஒரு போராட்டம்கூட இங்கே நடக்கவில்லை. ஏன், அவரது தரப்பினரேகூட அவரை மறந்துவிட்டிருந்தார்கள். சாவர்க்கருக்கும் மக்கள் செல்வாக்குக்கும் காத தூரம். சாவர்க்கர் என்றொருவர் இருக்கிறார் என்பதையே மக்கள் அறிந்திருக்கவில்லை. அறியும் அளவுக்கு சாவர்க்கரும் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அவர் பேசியதெல்லாம் வன்முறை, வெறுப்பு, பிரிவினை மட்டும்தான். சிறைக்குள்ளேயும் அவர் அதைத்தான் செய்தார். கைதிகளை இஸ்லாமியர், இந்துக்கள் என்று பிரித்துப் பார்த்து வேலையைக் காட்டினார். இது, அவர் எழுதிய அந்தமான் சிறை அனுபவங்கள் புத்தகத்திலேயே பதிவாகியிருக்கிறது. `இஸ்லாமியர்களின் தொழுகை நேரத்தில், சங்கநாதம் எழுப்புங்கள் என்று இந்துக்களை அவர் தூண்டினார்என்று, அவரது ஆதரவாளர்களே பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலே, `நான் நெருப்புடன் விளையாடுகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் தொடர்ந்து செய்வேன்என்று, ஆங்கிலேயனின் நீதிமன்றத்தில் நெஞ்சம் நிமிர்த்தி அறிவித்தவர் காந்தி!
ஜின்னாவுக்கு முன்பே, இரண்டு தேசங்கள் கோட்பாட்டை முன்மொழிந்தவர் சாவர்க்கர்தான். நன்றாகக் கவனிக்கவும். ஜின்னாவை வழிமொழிய வில்லை சாவர்க்கர். அவர்தான் முன்மொழியவே செய்கிறார். அந்த `Holy land' கருத்தாக்கத்திலேயே, இரண்டு தேசங்களுக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. அதையே, பின்னாளில் அரசியல்வெளியில் விரித்தெடுத்தார் ஜின்னா. அதாவது, கல்லை உரசி நெருப்பைப் பற்றவைத்தார் சாவர்க்கர். ஜின்னா அதை ஊதிப் பெரிதாக்கினார். அவ்வளவுதான். உண்மையில் 1939-ம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான், `இரண்டு தேசங்கள் (Two Nations)’ எனும் தீர்மானத்தையே போடுகிறது, முஸ்லிம் லீக். ஆனால், 1937-ம் ஆண்டே, `இரண்டு தேசங்கள்தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டது, இந்து மகா சபா. சாவர்க்கர் அப்போது அதன் தலைவர். 1937-ம் ஆண்டின் முற்பகுதியில், அகமதாபாத்தில் நடந்த இந்து மகாசபா கூட்டத்தில் பேசிய சாவர்க்கர், `இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன. ஒன்று இந்துக்களுடையது, இன்னொன்று முஸ்லிம்களுடையதுஎன்று பிரகடனம் செய்தார். அந்தப் பிரகடனமே பின்னர் தீர்மானமானது.
அடுத்து காட்சிக்கு வருகிறார், மாதவ சதாசிவ கோல்வால்கர். சாவர்க்கரின் சிஷ்யப்பிள்ளை இவர். கோல்வால்கர் என்ன சொல்கிறார் தெரியுமா? `இந்துப் பெரும்பான்மை அடையாள அரசியலே உண்மையான தேசியவாதம். அது அல்லாத எந்த அரசியலும் இந்தியாவுக்கு விரோதமானதுஎன்று இன்னொரு குண்டைத் தூக்கி வீசுகிறார். இவர்களின் இதுபோன்ற கூற்றுகளுக்குப் பிறகுதான், ஜின்னா அதிக நம்பிக்கை கொள்கிறார். `அவர்களே சொல்லிவிட்டார்கள். அப்புறம் என்ன?’ என்று பிரிவினைக்கத்தியை இன்னும் ஆழமாக இந்தியாவின் நெஞ்சில் ஜின்னா இறக்க ஆரம்பித்தது 1940-களுக்குப் பிறகே! இன்னுமொரு தகவல். 1945-ம் ஆண்டு இன்னும் எல்லையைக் கடக்கிறார் சாவர்க்கர். `ஜின்னாவின் இரண்டு தேசங்கள் எனும் கருத்தாக்கத்தில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. நாம் இந்துக்கள் ஒரு தேசம், முஸ்லிம்கள் இன்னொரு தேசம்என்கிறார்.
இங்கே நாம் இன்னொன்றை பார்க்க வேண்டும். இன்றுவரை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏன் பாரத ரத்னா மறுக்கப்படுகிறது? எம்.ஜி.ஆரால் அடைய முடிந்த அந்த விருதை அவரின் ஆசான்களான அவர்களால் ஏன் அடைய முடியவில்லை? இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது ஒரே ஒரு விஷயம்தான். அதாவது, `அவர்கள் பிரிவினை பேசினார்கள்என்பது. பெரியாரும் அண்ணாவும் பேசியது பிரிவினை என்றால், சாவர்க்கர் பேசியதற்கு பெயர் என்ன? பெரியார், அண்ணாவுக்கு ஒரு நியாயம், சாவர்க்கருக்கு ஒரு நியாயமா?’அதெப்படி ஒரே விஷயத்தில் இரண்டு நியாயங்கள் இருக்க முடியும்என்பதே நாம் எழுப்பும் கேள்வி!
கடைசியாக, காந்தி கொலை! காந்தி கொலையில் சிக்கியவர்கள், மொத்தம் 9 பேர். நாதுராம் கோட்சே, அவரின் சகோதரர் கோபால் கோட்சே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கர்கரே, மதன்லால் பஹ்வா, ஷங்கர் கிஸ்தயா, தத்தாத்ரேயா பர்சுரே மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இன்னொருவர் இருக்கிறார். அவர் திகம்பர் பாட்ஜே. இந்த பாட்ஜே மிகவும் முக்கியமானவர். ஏனென்றால், இவரது வாக்குமூலம்தான் கோட்சேவுக்கும் சாவர்க்கருக்கும் இருந்த தொடர்பை, தெள்ளத்தெளிவாகக் காட்டியது. பாட்ஜேவின் வாக்குமூலம் இது... `1948 ஜனவரியில் நாங்கள் இருமுறை சாவர்க்கரை சந்தித்தோம். முதல் சந்திப்பு ஜனவரி 14-ம் தேதி நடந்தது. நான், நாதுராம், ஆப்தே மூவரும் பாம்பேயில் இருக்கும் சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். இரண்டாவது மாடியில் அவரது அறை இருந்தது. நான் கட்டடத்துக்கு வெளியே நின்றேன். நாதுராமும் ஆப்தேவும் உள்ளே சென்றனர். சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். `காந்தியையும் நேருவையும் முடிக்க வேண்டும் என்று அவர் சொன்னதாக கோட்சே என்னிடம் சொன்னார். `Gandhi and Nehru should be finished' என்ற வார்த்தையையே வாக்குமூலத்தில் சொல்கிறார் பாட்ஜே. அந்த ஜனவரி 14-ம் தேதிதான், கோட்சேவின் கைக்கு துப்பாக்கியும் வந்து சேர்கிறது.
அடுத்த சந்திப்பு, ஜனவரி 17-ம் தேதி நடக்கிறது. இப்போதும் அதே மூவர்தான் செல்கிறார்கள். இந்த முறை பாட்ஜே, சதனுக்குள் நுழைந்து, முகப்புப் பகுதியில் நிற்கிறார். 10 நிமிடம் கழித்து கோட்சேவும் ஆப்தேவும் மாடி அறையில் இருந்து வெளியே வருவதை, பாட்ஜே கவனிக்கிறார். அவர்களுக்கு முன்னால் நின்றபடி ஒரு மனிதர் பேசிக்கொண்டிருக்கிறார். அவரது முகம் பாட்ஜேவுக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், குரல் நன்றாகக் கேட்கிறது. அந்த நபர், மராத்தியில் பேசுகிறார். `வெற்றியுடன் திரும்புங்கள்என்று, அவர் இருவர்களிடம் சொல்லும் வார்த்தை பாட்ஜேவின் காதில் விழுகிறது. அடுத்து, ஜனவரி 20-ம் தேதி, காந்தியைக் கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதைச் செய்தது, மதன்லால் பஹ்வா. `விஷ்ணு கர்கரேவால் சாவர்க்கரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவன் அவன்என்பது, சாவர்க்கரின் உதவியாளர்களான ராமச்சந்திர காசரும் விஷ்ணு தம்லேவும் அளித்த வாக்குமூலம். ஆனால், அந்த முயற்சி தப்புகிறது. பஹ்வா கைது செய்யப்படுகிறான். ஜனவரி 30-ம் தேதி காந்தி கொல்லப்படுகிறார். கோட்சேவின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட மூன்று குண்டுகள் அதைச் செய்கின்றன.
பாட்ஜேவை `நம்பகமான சாட்சி (Trustful Witness)’ என்றே வரையறுக்கிறார், விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி ஆத்ம சரண். ஆனால், அவரது சாட்சியத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள், கிடைக்காமல் போகின்றன. இதன் அடிப்படையிலேயே, சாவர்க்கர் விடுவிக்கப்படுகிறார். உண்மையில், கோட்சேவுக்கும் சாவர்க்கருக்கும் இருந்த உறவு குரு - சிஷ்யன் வகையிலானது. இந்து மகாசபா கூட்டங்களுக்கு, கோட்சேவையும் ஆப்தேவையும் அழைத்துச் செல்வதில், அதிக ஆர்வமாக இருந்திருக்கிறார் சாவர்க்கர். ஆனால், காந்தி கொலைக்குப் பிறகு, இருவருக்கும் இடையே விரிசல் உண்டாகிறது. காரணம், சாவர்க்கரின் சந்தர்ப்பவாத வாக்குமூலம்! கோபால் கோட்சேவின் வழக்கறிஞர் இனாம்தார் நாதுராமின் அப்போதைய மனவோட்டம் என்னவாக இருந்தது என்பதைப் பதிவு செய்கிறார். `நாதுராம் சிறையில் தனிமைப்பட்டுக்கிடந்தார். அவருக்கு அப்போது தேவைப்பட்டது அவரது கையை அன்பாகத் தொட்டு உரையாடக்கூடிய அவரது குருவின் சொல். ஆனால், அது நடக்கவில்லை. அந்த வருத்தத்தை சிறையில் என்னை சந்தித்தபோது பகிர்ந்துகொண்டார் நாதுராம்என்கிறார் அவர்.
1964 அக்டோபரில் கோபால் கோட்சே விடுதலையானார். அடுத்த மாதமே, அவருக்கு ஒரு வரவேற்பு விழா நடக்கிறது. அதில், `காந்தியைக் கொல்வதன் அனுகூலங்களை எனக்கு விளக்கினான் நாதுராம்என்று சொல்கிறார் கோபால் கோட்சே. விவகாரம் மீண்டும் வெடிக்கிறது. நீதிபதி ஜேஎல் காபூர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, காந்தி கொலை மறு விசாரணை செய்யப்படுகிறது. இது நடந்தது 1965 மார்ச் மாதம். அடுத்த வருடம், பிப்ரவரி மாதம் சாவர்க்கர் இறக்கிறார். உணவையும் தண்ணீரையும் மறுத்து வலுக்கட்டாயமாக அவர் அந்த மரணத்தைத் தேடிக்கொள்கிறார். அவர் அந்த முடிவை எடுக்க முக்கியமான காரணம், காபூர் கமிட்டியால் அவர் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டிருந்தார் என்பது. இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தால், காபூர் கண்டிப்பாக சாவர்க்கர் கையில் விலங்கு மாட்டியிருப்பார். காபூர் அறிக்கையின் ஆறாம் அத்தியாத்தில், `Background of the accused' என்றொரு பகுதி இருக்கிறது. அதில், காந்தி கொலையில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு, விரிவாகவே பேசப்படுகிறது.
இவ்வளவு ஏன்? 1966-ல் கோபால் கோட்சேவின் “Gandhi's murder and I” என்ற புத்தகம் வெளியானது. அதில், `1929 ரத்னகிரியில் இருந்தபோதிலிருந்தே சாவர்க்கருக்கும் நாதுராமுக்கும் நல்ல பழக்கம். தனிப்பட்ட முறையில் தினமும் நிறைய பேசிக்கொள்வார்கள்என்று சொல்கிறார் கோபால் கோட்சே. ஆகவே, காந்தி கொலைக்கு சாவர்க்கர் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்தார் என்பது உறுதியாகிறது.
காந்தி மீதான சாவர்க்கரின் பகைக்கு மிக முக்கியக் காரணம், அவரது அகிம்சை! வாழ்வு முழுதுமே, `Hindu Masculinity (இந்து வீரம்)’ என்பது குறித்து தீவிரமாகப் பேசுகிறார் சாவர்க்கர். ஒன்று தெரியுமா? சாவர்க்கர் பசுவழிபாட்டை கடுமையாக எதிர்த்தவர். அதற்குப் பின்னால் இருந்தது, பன்மைத்துவத்தைப் பேணும் அக்கறை என்று தவறாக நினைக்க வேண்டாம். `பசுவை வணங்கினால் பசுவைப் போலவே நாமும் சாந்தமாகிவிடுவோம்என்று அவர் எண்ணியதே, அதற்குக் காரணம். அந்த அளவுக்கு அகிம்சை அவருக்கு ஆகாத ஒன்றாக இருந்தது. அவர் ஆரம்ப காலத்தில் அங்கம் வகித்த, அபினவ் பாரத் அமைப்பு, அடிப்படையிலேயே வன்முறையைப் போற்றும் அமைப்பு. அதிலிருந்து கிளைத்து எழுந்து வந்தவர் அவர்! இந்துக்களை வீரம்மிக்க ஒரு சமுதாயமாகவே அவர் உருவகித்தார். `பள்ளிகளில் படிப்பைவிட உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்என்று அவர் குரல் கொடுத்தது, அதற்காகவே. கனவு வெளியில், வேதகாலத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்த மனிதர் அவர். ஆகவே, அகிம்சை அவருக்கு பிடிக்கவில்லை.
இப்படிப்பட்டவர், வீரம்செறிந்த நேதாஜியுடன் இணைந்திருக்கலாமே என்ற கேள்வி, சிலருக்கு எழலாம். அந்தக் கேள்வி நியாயமான ஒன்று. ஆனால், அங்கேதான் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, காந்தியைப்போலவே, நேதாஜியும் உடையாத, மதச்சார்பு இல்லாத ஒரு இந்தியாவை கனவு கண்டவர். நேதாஜியின் அகிம்சையைக் காந்தி சந்தேகித்தாரே ஒழிய, அவரது மதச்சார்பற்ற தன்மையை அவர் எப்போதுமே சந்தேகித்ததில்லை. நேதாஜியின் படையில் இஸ்லாமியர்களும் அதிகளவில் பங்கெடுத்ததற்கு, அவரது மதச்சார்பற்ற தன்மையே காரணம். அது, சாவர்க்கரின் பிரித்தாளும் கொள்கைக்கு உவப்பானதாக இல்லை. அதுவும் இல்லாமல், சாவர்க்கர் களவீரரும் அல்ல. அவர் எப்போதுமே பின்னால் இருந்து இயங்குபவர். தூண்டிவிடுவதில் சமர்த்தர். `Man in the chair' என்போம் அல்லவா, அதே போன்றவர்.
இன்னொன்று தெரியுமா? அவர், இந்தியாவில் வைத்து கைது செய்யப்படவில்லை. லண்டனில் வைத்துதான் கைதானார். வில்லியம் கர்சனின் கொலையாக இருக்கட்டும், ஜாக்சனின் கொலையாக இருக்கட்டும், அவர் நேரடியாகச் செயலாற்றவே இல்லை. அதற்குரிய அத்தனை உதவிகளையும் செய்தார், திட்டங்களை வகுத்தார். `20 துப்பாக்கிகளை அவர் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பினார்என்கின்றன, தரவுகள். ஆனால், எங்குமே காட்சிக்கு வராமல் சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொண்டார் சாவர்க்கர். அந்தமான் சிறையிலும்கூட தூண்டிவிடும் வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். சக கைதிகளை உண்ணாவிரதத்துக்குத் தூண்டிவிட்டுவிட்டு, அவர் உணவருந்த சென்ற நிகழ்வும்கூட நடந்திருக்கிறது.
ஆகவே, இதுதான் சாவர்க்கர்! இவைதான் அவரது அரசியல்! மக்களைப் பிரித்தாளும் சித்தாந்தம், களத்துக்கு வராமல் பின்னே இருந்து இயங்குவது, மாட்டிக்கொண்டால் சீடனாகவே இருந்தாலும் கழட்டிவிடுவது என்று இருந்தவர் சாவர்க்கர். அவரது சித்தாந்தத்தாலோ, அவரது செயற்பாடுகளாலோ இந்தியாவுக்கும் எந்தப் பயனுமில்லை. இவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும், `சாவர்க்கருக்கு பாரதரத்னா கொடுத்தால் என்ன தப்புஎன்று கேட்பவர்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. குறைந்தபட்சம் ஒன்றை மட்டுமேனும் உணர்வோம். சாவர்க்கர் முன்னே எழுந்துவரும் ஒவ்வொருமுறையும் அசோகர் புதைக்கப்படுகிறார், அவரது தத்துவம் புதைக்கப்படுகிறது. ஒன்றை யோசிப்போம்.
அகிலத்தின் எத்தனையோ நாடுகளில் ஜனநாயகம் வெறும் கனவாக மட்டுமே இருக்கும் சூழலில், இந்தியா மட்டும் எப்படி அதை இன்னும் தக்கவைத்திருக்கிறது? காற்றடித்தாலும் மழையடித்தாலும், இந்தியாவின் ஜனநாயக தீபம் மட்டும் தொடர்ந்து ஒளிர்வது எப்படி. காரணம் எளிது. ஏனென்றால், இந்தியாவின் மரபிலேயே ஜனநாயகப் பண்புகள் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கின்றன. கட்டியவர், அந்த மகா சக்கரவர்த்தி அசோகர்! அவரும் ஓர் அரசர்தான். ஆனால், மற்ற அரசர்களிடம் இருந்து அசோகர் எங்கே வேறுபடுகிறார் தெரியுமா. மக்களின் மீதான அபிமானத்தில் வேறுபாடுகிறார். மரபை சீரமைத்து முன்னெடுத்துச் சென்றதில், வேறுபடுகிறார். கலிங்கத்தின் தயா நதிக்கரையில் இறந்து மிதந்த மனித உடல்களைக் கண்டு, ‘என்ன செய்துவிட்டேன் நான்...’ என்று வருந்திய குரலில், வேறுபடுகிறார்.
ஆம். இத்தேசம் அசோக தத்துவத்தால் கட்டமைப்பட்டது! `வரலாற்றை நிறைத்து நிற்கும் எத்தனையோ பேரரசர்களின் பெயர்களின் மத்தியில், அசோகர் மட்டுமே ஒரு வீழா நட்சத்திரமென தனித்து ஒளிர்கிறார்என்று ஆய்வாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் விழிவிரித்து கூறினாரே, அந்த அசோகரின் தத்துவத்தால் கட்டமைக்கப்பட்டது! இதை உணர்ந்தே, சிவாஜியை இடதுபக்கமும் அக்பரை வலது பக்கமும் ஒதுக்கிவிட்டு, அசோகரை இந்தியாவுக்கு அடையாளமாக்கினார் நேரு. தர்ம சக்கரம் சுழலும் அந்தச் சிங்கச்சிலையை இந்திய சின்னமாக்கி, `எழுக அவர் வேதம். எக்குடியும் என்குடியே என்றுரைக்கும் அசோகவேதம்என்று நேரு அறிவித்தபோது, இந்திய அன்னை துள்ளிக்குதித்து கூத்தாடினாள். சாவர்க்கர் வழிபாடு, அவளின் அந்த சந்தோஷத்தைக் கண்டிப்பாக நிர்மூலமாக்கும். 2000 ஆண்டுகளாக இந்த மண்ணில் ஊறி நின்றிருக்கும் மகத்துவத்தை, அது 20 வருடங்களுக்குள் அழித்தொழிக்கும்.
அறிக... அசோகரே புதைகிறாரென்றால் காந்தியும் இருக்கப்போவதில்லை. நேருவும் அகன்றிருப்பார். அம்பேத்கரும் கூட கைவிட்டிருப்பார். இது உருவாக்கப்போகும் விளைவை, நம்மால் இப்போது உணர முடியாது. ஹிட்லரின் ஜெர்மனியாக, நத்தேன்யாஹூவின் இஸ்ரேலாக இத்தேசம் மாற்றப்பட்ட பிறகுதான், நமக்கு அந்த உணர்வு எழும். ஆனால், அப்போது எல்லாமே கையைமீறிப் போயிருக்கும். நமக்கான கங்கைகளைத் தேடி நாம் அலையத் தொடங்கியிருப்போம். நாசிக்குள் புகுந்து நம்மை நிலைகுலையச் செய்யும் ரத்தத்தின் வீச்சத்தை நம்மால் கடக்கவே முடியாமல் இருக்கும். அது வீடோ, அலுவலகமோ, பேருந்தோ, ரயிலோ, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெறுமனே அமர்ந்திருப்போம். உண்ணச் சென்றால், தட்டில் இஸ்லாமிய குழந்தையின் உடைக்கப்பட்ட வெள்ளெலும்பு உணவென நெளியும். உறங்கச் சென்றால், கிறிஸ்துவ குழந்தையின் உரிக்கப்பட்ட தோல், படுக்கை விரிப்பென விரியும். அரண்டு ஓடிவந்து வெட்டவெளியில் நின்று, வான்நோக்கி இறைஞ்சுவோம், `அய்யோ... அப்போதே உணரத் தவறிவிட்டோமே...’ என்று. அதைக் கேட்கவும் அப்போது நாதியிருக்காது. கடவுளால் தனித்துவிடப் பட்டிருப்போம். அறத்தால் தள்ளிவைக்கப் பட்டிருப்போம். மனிதர்களை மதத்தாலும், இனத்தாலும் பிரித்து அரசியல் செய்த அரக்கர்களின் பின்னால் நின்ற அத்தனை பேருக்கும் கடைசியில் எஞ்சுவது, தீரா பழிச்சொல்லும், விலகா பெரும் பாவமுமே.
அது நமக்கு உவப்பென்றால், சாவர்க்கருக்கு பாரதரத்னா அளிப்போம். அடுத்து, கோல்வால்கருக்கும். கடைசியாக, கோட்சேவுக்கும்!

Wednesday, June 26, 2019


சுபாஷ் சந்திரபோஸ்!
'என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?'
இது ஒரு பிரபலமான நபரின் காதல் கடிதம். இன்று அவருக்குப் பிறந்த நாள். ஆம், இக் காதல் கடிதத்தை எழுதியவர் சுபாஷ் சந்திரபோஸ்!
இந்தியாவின் வீரம் செறிந்த விடுதலை வீரர். இந்தியாவின் மர்மம் நிறைந்த நபராகவும் திகழ்பவர்.
அவரது வாழ்வின் முதற் பகுதி, இடைப் பகுதி வெளிப்படையானவை.
அவரது இறுதி, மரணம் போன்றவை ரகசியமானவை!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் போல ஒரு மாதிரி அரசாங்கத்தை நிறுவியவர் போஸ். அவ்வரசாங்கத்தின் ரூபாய் நோட்டில் ஒரு வாசகம்.உங்கள் குருதியைக் கொடுங்கள். விடுதலையைத் தருகிறோம். எனும் அர்த்தத்தில் அவ்வாசகம் அமைந்திருந்தது.
ஒரு முறை முசோலினி, போஸ் குறித்து,  'அவர் காலம் தவறிப் பிறந்தவர். வரலாற்றில் மாவீரன் அலெக்ஸாண்டர், நெப்போலியனுக்கு இணையான வீரர்!' எனப் பாராட்டினார்.
நேதாஜி காங்கிரசின் இடது முகம்!
அவரது குரலை காந்தி முடக்க
முயன்றார்.  காங்கிரஸ் சித்தாந்தப் புலத்தில் வேறுபட்டார் சுபாஷ்.
இதன் பொருட்டு அவரை காங்கிரசுக்கு எதிரானவராகக் காட்டி, தமது சித்தாந்தத்
தோடு இணைத்துப் பார்க்கும் வேலை
யை, காவிக் கட்சியினர் செய்தனர்.
நேதாஜியை அவரது குடும்பத்தை கண்
காணிக்க, முடக்க, நேரு முயன்றதாக கதை கட்டினார்கள். தவறான கட்டுக்கதைகளிவை!
காந்தி, நேரு இருவரும் நேதாஜியோடு கொண்டிருந்தது சித்தாந்த முரண் மட்டுமே! மற்றபடி, அவரை அழிக்க எண்ணியவர்களல்லர்.
சரி, அந்தக் காதல் கடிதத்துக்கு வருவோம். நேதாஜி வியன்னாவில் சிகிச்சை பெற்ற போது, அவரது எழுத்துப் பணிக்கு உதவியாளராக வந்தவர் எமிலி.
அந்த எமிலி மீது கொண்ட காதலில் எழுதப்பட்டதே அக்கடிதம்.
1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாள் தங்களது திருமணம் நடைபெற்ற
தாக பிறகு எமிலி தெரிவித்தார்.
தேச விடுதலையில் இருந்த நாட்டத்தால் போஸ் தனது திருமணச் செய்தியை வெளிப்படுத்தவில்லை. மிகச் சொற்ப
காலமே இவர்கள் இணைந்து வாழ்ந்தனர்.
தேசப்பற்றால் காதலையும் இழந்த
வீரர் சுபாஷ் சந்திர போஸ்!

யாரிவள்

மிகவும் ஒயிலாக
இந்தக் காலையில்
தன் ஸ்கூட்டியில்
டென்னிஸ் பயிற்சிக்கு விரைகிறாளே
அவளல்ல...

மாடித் தோட்டத்தில்
வளர்க்கும் வண்ணக் கிளிகளோடு
கொஞ்சிப் பேசுகிறாளே
அவளல்ல

காதில் ஒலிப்பானொடு
அருகிலுள்ள பூங்காவில் 
கைவீசி நடக்கிறாளே
அவளல்ல

வார இறுதியில்
எந்தத் திரைப்படம் போகலாமெனத்
தோழியோடு திட்டமிடுகிறாளே
அவளல்ல

தன் அம்மாவின் மடியமர்ந்து
கைக்கு மருதாணி
இட்டுக் கொண்டிருக்கிறாளே
அவளல்ல...

இந்தக் கவிதையை
இதோ தன் கைபேசியில்
வாசித்துக்  கொண்டிருக்கிறாளே
அவளுமல்ல.

பின் யாரவள் ...?

செங்கல் சுமப்பதற்கோ
நாற்று நடவுக்கோ
நூறு நாள் வேலைக்கோ
தெருக் குழாய் தண்ணீருக்கோ
ஐந்து ருபாய் ஷேர் ஆட்டோவுக்கோ
ஆசிட் பினாயில் விற்பதற்கோ...

தன் சிறகுகளை விரித்துப்
பறக்க முடியாமால் போனாலும்
கண்ணாடி வளையலோடு
பொன் தோற்றத்துக் கம்மலோடு
நடைபாதைக் கடை உடைகளோடு
விலையுயர்ந்த தன்னம்பிக்கை எனும் அழகோடு
நடந்து கொண்டிருக்கிறதே
ஒரு பறவை ... !!

வீடு வந்து அழைத்தும் கூட
அவள் திருமணத்திற்குத்தான்
நீங்கள் சென்றதே இல்லையே.
காலம் கவர்ந்து சென்ற காணற்கரிய கனவுப் போக்கிஷமாய் - காந்தி

கண்ணீரால் கழுவி கறை யகற்றவொண்ணா கொடுமையின் விலையாய் - காந்தி

திசையறியாப் பெருவழியின் வழித்துணை விண்மீனாய் - காந்தி.

பேத்திகள் மனு அபா
தோள்களில் இருகை சேர்த்து
ஒரு பறவையைப் போன்ற
மெலிந்த மனிதர்
பிர்லா மந்திரிலிருந்து 
வெளியேறி நடக்கிறார்

செயலாளர் பிரிஜ் கிருஷ்ணா தனிச்செயலாளர் கல்யாண் 
பாதுகாப்பு அதிகாரி குருபச்சன் சிங்
பிர்லா குடும்பத்தினர் தொடர
பிரார்த்தனைக்காக செல்லும் 
கனிந்த நடையது

இன்னும் 200 மீட்டர் தூரமிருக்கிறது
அது தன் வாழ்வின் இறுதியை எட்டும் தூரமென அறிந்திருப்பாரோ தேசபிதா

விடுதலை மறுக்கப்பட்டவர்கள்
சாதியால் கசந்து ஒதுக்கப்பட்டவர்கள்
மதவெறியால் சிதைந்தவர்களென
எல்லோருக்காகவும் 
எத்தனை தூரம் யாத்திரை போனவர்
இன்னுமவர் நடக்க வேண்டிய
தூரம் 200 மீ மட்டுமே

மோகன்தாஸ் கரம்சந்த்தாக
போர்பந்தரில் தொடங்கிய பயணம் 

மும்பை, டர்பன், பீட்டர்மரிட்ஸ்பெர்க், ஜோகன்னஸ்பர்க், பீனிக்ஸ்
என வளர்ந்த பயணம்

டால்ஸ்டாய் ஃபார்ம் 
சாம்பரான், சபர்மதி, 
எரவாடா, தண்டி,
கின்ஸ்லே ஹால்,
செயின்ட் தாமஸ் 
சேவாகிராமம்,
ஆகாகான் அரண்மனை,
நவகாளி, கல்கத்தா, டில்லி
என தொடர்ந்த பயணம்

இதோ, பிர்லா ஹவுசில் 
முடிந்துவிடுமென யாரறிவார்?

இந்தியாவின் பாதையில்
தீவினை குறுக்கே வந்தது போல்
மகாத்மாவின் பாதம் பணிந்தான்
37 வயது இளைஞன்

எழுந்தவன் 
வணக்கம் சொல்கிறான்
தேசபிதாவுக்கு

அவனது கைகளில் பளபளக்கிறது
இத்தாலி தேசத்து பெரட்டா பிஸ்டல்

முன்பு ஹிட்லரிடமிருந்த
முன்பு முசோலினியிடமிருந்த
அதே துப்பாக்கி
சாவர்க்கரும்
கேசவ பலிராம் ஹெட்கேவரும்
ஆசிர்வதித்துக் கொடுத்த 
பிரசாதம்போல 
இப்போதது
நாதுராம் கோட்சேயிடமிருக்கிறது

வெள்ளைக்காரர்கள் காத்தளித்த விலை மதிப்பற்ற உயிரை 
அதன் மூன்று குண்டுகள் 
பூவைப் போல கொய்தபோது
என்றுமே கழுவ முடியாத கரையாய் 
காந்தி மகானின் குருதி 
இந்நிலத்தில் பரவியது

இந்தியக் கண்ணீரின் ஒலி இமையமலை
விந்திய சாத்பூரா மலை
வங்கம் அரபி இந்தியக் கடலென மோதி எதிரொலித்தது

மருத்துவர் டி.பி.பார்க்கவா 
பாபுஜியின் மரணத்தை 
உறுதிசெய்தபோது
உலகத்தின் முன் 
தந்தையற்ற பிள்ளையாய் 
தலை கவிழ்ந்து 
நின்றது இந்தியா

இந்திய அரசியலின் 
முக்கிய தருணத்தில் 
செல்வமெலாம் துறந்து 
எந்த மகானின் கை பிடித்து நடந்தாரோ
அவரது ரத்தம் தோய்ந்த உடையில் தன் தாமரை வதனத்தைப் புதைத்து 
ஒரு குழந்தையைப் போல்தேம்பி அழுதார் நேரு

மறுநாள் உலகமே 
இவ்வுலகின் கடைசி 
அஹிம்சையாளனைக் காண 
இந்தியாவுக்கு வந்தது

வாழ் நாளெலாம் 
நாற்காலியை விரும்பாத 
அந்த எளிய மனிதனின் உடலை 
முப்படைகள் அணிவகுக்க
ராணுவ வண்டி இழுத்துச் சென்றது

இரண்டுமைல் நீளம் 
பதினைந்து லட்சம் மனிதர்கள் 
கண்ணீர் பூக்களை உதிர்த்து 
அஞ்சலி செலுத்தி அழுதனர்

யமுனைக்கரையில் 
அடிமைகளின் வெயிலழித்த 
மாமனிதரின் சிதையை
மகன் ராமதாஸ் எரியூட்ட 

உலகில் ஆழிக்க முடியாத 
வரலாற்றை எழுதிய 
அவ்வுடலை 14 மணிநேரம் 
தீயின் நாக்குகள்
தின்று தீர்த்தன

'மகாத்மா அமரரானா்!'
என்ற முழக்கம் இந்தியாவின் எண் திசைகளிலிருந்தும் 
எழுந்து வந்தது

மறுநாள் அஸ்த்தியை சேகரித்தபோது மதவெறியின் தீராத வெஞ்சினத்தில் 
வெந்து தணிந்திருந்ததொரு குண்டு

இப்பேருலகுக்கு 
உண்மையான ஆன்மீக அரசியலை கற்பித்தவரின் சாம்பலை 
இந்தியாவில் மட்டுமல்ல

பர்மா இலங்கை 
மலேயா திபெத்தென
எங்கும் அமைதியின் 
விதைகளாய்த் தூவினார்கள்

நமது வாழ்வின் விளக்கு 
அணையவில்லை 
அது மேலும் பல ஆண்டுகள் 
இத் தேசத்திற்கு
ஒளி காட்டுமென 
ஆற்றுப்படுத்தினார் நேரு

புத்தரோடு இணைத்து 
காந்தியைப் பேசியது உலகு

"அளவுக்கு மீறி நல்லவராக 
இருப்பதுகூட கொடியதோ"வென
அய்யமெழுப்பிய பெர்னாட் ஷா 
இந்தியாவை 
காந்தி நாடென மகிழ்ந்தார்!

ஆனாலும், நண்பர்களே!

கோட்சே கல்லறையில் 
தூக்கமின்றி புரண்டு படுக்கிறான்

ஆவனது பெரட்டாவில் 
இன்னும் நான்கு தோட்டாக்கள் மீதமிருக்கின்றன!

நண்பர்களாக இருப்பது

நண்பர்களே..
இந்தக் கயிறு இழுக்கும்
போட்டியில் நான்..

என் மொழிக்காரனோடு
நின்றிருக்க வேண்டும்

என் தேசத்துக்காரனோடு
நின்றிருக்க வேண்டும்

என் மதத்துக்காரனோடு
நின்றிருக்க வேண்டும்

என் சாதிக்காரனோடு
நின்றிருக்க  வேண்டும்

என் சக அரசூழியனோடு
நின்றிருக்க வேண்டும்

என் பாலினத்தவனோடு
நின்றிருக்க வேண்டும்

என்கடவுளோடு
நின்றிருக்க வேண்டும்

நின்றேனா..

இல்லையே

அழுதவனோடு நின்றேன்

அகதிகளோடு நின்றேன்

சிறுபான்மையரோடு நின்றேன்

ஒடுக்கப்பட்டவரோடு நின்றேன்

பைத்தியக்காரர்களோடு நின்றேன்  

பாலியல் தொழிலாளிகளோடு நின்றேன்

திருடர்களோடு நின்றேன்

பெண்களோடும் மூன்றாம்
பாலினத்தவரோடும் நின்றேன்

பிசாசுகளோடு நின்றேன்

இந்த கயிறு இழுக்கும் போட்டி
வரலாற்றில் முடிவுறாமல்
நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நான் நிற்கும் அணியில்தான்
முன்னைப் பழமையாய்
வள்ளுவர் நின்றார்.

ஔவை நின்றார்.

புத்தர் நின்றார்.

நீட்ஷே நின்றார்.

மார்க்ஸ் நின்றார்.

மாவோ நின்றார்.

பாரதி நின்றார்.

அம்பேத்கர் நி்ன்றார்.

பெரியார் நின்றார்.

நண்பர்களே இக்கயிறிழுக்கும்
போட்டியில் நீங்கள் எந்த அணி
தெரிந்தால்தான் நாம்
நண்பர்களாகவே இருக்க முடியும்.


உலகத்தின் முதல் தத்துவ ஞானி சாக்ரடீஸ்

சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு கிரேக்கத்தில், ´ஆதென்ஸ்´ என்ற இடத்தில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். அப்போது உலகில் எந்த மதமும் தோன்றவில்லை . தன் சுயமுயற்சியால் மனித அறிவின் தோற்றம் குறித்த அறிவு, தர்க்க சாஸ்திரம் ஆகிய வற்றில் திறன் பெற்று விளங்கினார் .இவரைப் பற்றி வரலாற்றில் ஒரு மதிப்பிடு உண்டு. “கேள்விக் கேட்கத் தெரிந்த வரலாற்று நாயகன்” என்பார்கள். சொல்லுவதை அப்படியே நம்பிக்கொண்டு, அவை குறித்த தர்க்க விவாதங்கள் எதையும் செய்யாமல், அப்படியென்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கூட்டத்தில் சாக்ரடீஸ் வித்தியாசமாக இருந்தார். ஆனால் , அவர் எதையும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை .
கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையைவிட்டு வெளியேறினார்.  சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.  சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண் டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.  எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.  பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.  ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்  பதில்  சொல்வதை  அவர்  தவிர்த்தார்.
ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.  பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச் செய்த சாக்ரடீஸ், அந்தப்  பிரச்சினையைத்  தீர்ப்பதற்கும் கேள்விகளைக்  கேட்டார்.
இதுபோன்ற செயல்களால் பொது மக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.  இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.  இதென்ன பிரமாதம்! உட்கார்ந்து ஊர் கதை பேசிக்கொண்டு, இடக்கு மடக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பது ஓர் ஆச்சரியமான விஷயமா? என்று நமக்கு தோன்றலாம். இன்றைய மனிதனின் அறிவை விட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் சிந்தனையில் கேள்விகளுக்கோ, சிந்தனைகளுக்கோ இடமில்லை.  அன்றைய மனிதனின் அறிவு அப்படி.
நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, சம்பிரதாயம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். அவரின் பேச்சுக்களும், புதிருக்கான விடைகளையும், நயத்துடன் எடுத்துப் பேசும் போது பொது மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஆதென்ஸ் இளைஞர்களுக்கு சாக்ரடீஸ் ஹீரோவாக இருந்தார். அந்த கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.  சமூக பழக்க வழக்கங்களை ஆராய்வதும், அரசு அமைப்பின் செயல் பாடுகளை விமர்சிப்பதும், எதிர் கேள்வியுமாக இருந்ததோடல்லாம ல், நிறைய விவாதங்களுக்கென நேரம் ஒதுக்கி பேச ஆரம்பித்திருந் தார். அவருடைய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி எப்போதும் இளைஞர்கள் குழுமியிருந்தனர். கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்ததல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது. ஆதென்ஸ் அரசுக்கு இந்த விஷயம் எட்டியது.
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது. அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளை ஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்த னர்.
சாக்ரடீஸ்  தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது  கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ்மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினான்.  இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வரும் கடவுள்களை தூற்றி , ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப்பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் , சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார், புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார் . சாக்ரடீஸ் மிகவும் தீயவர் . இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் .
இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ் , என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை . என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும்தான் என்றார்.  நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதை விட நாத்திகம் என்றார் .
இதன்பின்னர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது.  மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன. நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501 பேர் வாக்குப் பதிவு செய்யத் தொடங்குகின்றனர் .  220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும் , 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர்.  நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக் கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்பதை சாக்ரடீஸே தெரிவிக்கும்படி அறிவித்தனர்.
தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.
ஆனால் தண்டனை வழங் குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்று ம்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலு த்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.  சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.  அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்லவேண்டும் என்று கி.மு. 339 ம் ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர் .
அப்போது, ஆதென்ஸ் நகரில் அப்போலோ என்ற தெய்வத்தின் விழா நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்விழாவில் ´அப்போலோ´ தெய்வம் ஃடெலோஸ் என்றும் ஊரில் இருக்கும் திருத் தலத்திற்கு காணிக்கையாக பல பொருட்களை படகின் மூலம் திருத்தலத்திற்கு கொண்டு போய் காணிக்கையை கொடுத்துவிட்டு, அப்படகு திரும்பி ஆதென்ஸ் நகரத்திற்கு வரும் வரை அந்நகரில் இருந்து யாரும் வெளி ஊர்களுக்கு செல்ல மாட்டார்கள். அரசும் தண்டனைகள் எதுவும் கொடுக்காமல் அவ்விழா நாட்களில் தெய்வத்தின் புனிதத் தன்மையை பாதுகாத்து வருவது ஐதீகமாக இருந்தது. காணிக்கை கொண்டு செல்லும் அப் படகை கூட மிகப் புனிதமாக பாதுகாத்து ´புனிதப் படகு´ என்று வழங்கி வந்தனர் என்றால், ஆதெ ன்ஸ் மக்களின் அவ்விழா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி இருப்பர் என்பதை உணரலாம்.
சாக்ரடீஸிக்கு தண்டனை விதிக்கப் பட்ட போது, அப்போலோ தெய்வத்தின் விழா நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போலோவின் காணிக்கைகளை எடுத்துக் கொண்டு ஃடெலோஸ்க்கு சென்ற புனிதப் படகு இன்னும் ஆதென்ஸிக்கு வரவில்லை. சாக்ரடீஸிக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. புனிதப் படகு சரியான காலப்படி ஆதென்ஸிக்கு வந்து சேர்ந்திருக்கவேண்டும்.  ஆனால் காணவில்லை;  என்னாயிற்று புனிதப்படகுக்கு என்ற கவலை ஒரு பக்கம்.  சரி சாக்ரடீஸை என்ன செய்வது? படகு வரும்வரை தற்காலிகமாக வெளியில் விடலாமா என்று யோசனை வந்தபோது சாக்ரடீஸிக்கு எதிராக இருந்தவர்கள் மறுப்பு தெரிவித்தனர். புனிதப் படகு வரும் வரை தண்டனையை நிறைவேற்ற முடியாவிட்டாலும் சிறையில் அடைத்து வைத்திருந்து புனிதப் படகு வந்த பின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டது.
30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அது வரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடு களைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்துவிட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்கைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.
நீதிமன்ற விசாரணையின் போது, நான் சாவைக்கூட சந்திக்கத் தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.  சாக்ரடீஸ் சிறையில் அடைபட்டு மரண தண்டனையை எதிர் நோக்கி இருந்த காலம். ஒரு நாள் பக்கத்து அறையில் அடைபட்டு இருந்த கைதி ஒருவர் நரம்பு இசைக் கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். அந்த இசையை வெகுவாக ரசித்த சாக்ரடீஸ், அந்த கைதியிடம் சென்று `இந்த வாத்தியத்தை எப்படி இசைப்பது? என எனக்கும் சொல்லிக் கொடுங்கள்’ என்று கேட்டார்.  அந்த கைதிக்கு பயங்கர வியப்பு. `நீங்களோ மரண தண்டனை பெற்றவர்.  விரைவில் உயிரிழக்கப் போகும் நீங்கள் இதைக் கற்றுக் கொள்வதால் என்ன பயன்?’ என்று கேட்டார்.அதற்கு சாக்ரடீஸ், `மேலும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டேன் என்ற திருப்தியுடன் சாகலாம் அல்லவா? அதனால்தான்’ என்றார்.   இதைக் கேட்ட கைதி மீண்டும் வியப்பில் அசந்துபோனார்.
சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு. இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.  சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.  மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தபின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாக்ரடீஸ் பிணைந்து கொண்டார்.  அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை, அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது.  உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.
“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக்கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீ ஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.  இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.  “மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள். அதற்கு, “நீங் கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ். சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.
 நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி  சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.  விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார் அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்கவேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப் பணியாளன்.  கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.  “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு, சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கி னார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.  விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.  “இல்லை” என்றார்  சாக்ரடீஸ்.  சிறிது  நேரத்தில் அவர் விழிகள் மூடின.
 தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது. அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாக்ரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

Tuesday, August 7, 2018

                         ஹிரோஷிமா!

73 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில்தான் ஹிரோஷிமா மீது 'எனோலா கே'  எனும் பி-29 ரக போர் விமானம் பறந்தது. அப்போது அந்த நகரின் காலை அழகாக மலர்ந்திருந்தது.
மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு நடுநிலைப் பள்ளியில் காலை வழி
பாட்டுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பேருந்து நிலையம்,வங்கிகள் இயல்பிலி
ருந்தன.பேருந்தில் தந்தைமடியிலிருந்த  குழந்தை தன் தாய்க்கு கையசைத்து விடைதந்தது.

ஒரு கணம்.ஒரேகணம். அவ்விமானத்தி
லிருந்து யுரேனியம் நிரம்பிய 'சின்னப் பையன்' எனும் அணுகுண்டு வீசப்பட்டது.
அந்நகரின் உயர்ந்த கட்டிடங்கள் பொடிப்
பொடியாய் உதிர்ந்தது.நகரம் ஒரு இடுகாடைப்போலானது.எங்கும் கதிரியக்கம்.மனிதர்கள் வாழ்ந்த சுவடின்றி நகரை இருளின் நிழல் கவ்வியது.

கூடவே Neccessary evil எனும் இன்னொரு விமானம்.இப்பேரழிவை புகைப்படமெடுத்து ஆவணமாக்கியது.

1,40,000   பேர் மாண்டு போனார்கள்.
எஞ்சியவர்கள் கதிர்வீச்சின் கொடும் விளைவால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் வீழ்ந்தனர்.
தேவையே இல்லாமல் நாகசாகியில் மீண்டும் ஒரு நாசகாரச் செயல்
பேரழிவை நிகழ்த்தி ஏகாதிபத்தியத்தின் மேலாண்மையை நிறுவிய முதல் சோதனை ஹிரோஷிமா.

வியட்நாம்,ஈராக்,ஆப்கானென
அணு அழிவுகள் தொடர்ந்து கொணடிருக்கின்றன.

அணு இல்லாத சமாதானம் நிறைந்த உலகம் எனும் கனவுக்கு அமெரிக்கா ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.

கெட்ட போரிடும் உலகை வேரோடுச் சாய்ப்பதே கவிதை கதை கலை இவற்றின் நோக்கமாக இருக்கமுடியும்.
ஹிரோஷிமா தனது கருப்புக் கதையை கண்ணீர் வழிய நம்மிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.நாம் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.மறந்து விடக்கூடாது.

இந்தியா அதன் வெகுசன விழைவு
களைக் கடந்து அமெரிக்காவின்
அணு அடிமையாக இருக்கிறது.
நாம் கருத்தளவிலாவது அணுவுக்கு 
எதிராக நிற்போம்.

இன்று ஹிரோஷிமா நினைவு தினம்.