Wednesday, June 26, 2019


நண்பர்களாக இருப்பது

நண்பர்களே..
இந்தக் கயிறு இழுக்கும்
போட்டியில் நான்..

என் மொழிக்காரனோடு
நின்றிருக்க வேண்டும்

என் தேசத்துக்காரனோடு
நின்றிருக்க வேண்டும்

என் மதத்துக்காரனோடு
நின்றிருக்க வேண்டும்

என் சாதிக்காரனோடு
நின்றிருக்க  வேண்டும்

என் சக அரசூழியனோடு
நின்றிருக்க வேண்டும்

என் பாலினத்தவனோடு
நின்றிருக்க வேண்டும்

என்கடவுளோடு
நின்றிருக்க வேண்டும்

நின்றேனா..

இல்லையே

அழுதவனோடு நின்றேன்

அகதிகளோடு நின்றேன்

சிறுபான்மையரோடு நின்றேன்

ஒடுக்கப்பட்டவரோடு நின்றேன்

பைத்தியக்காரர்களோடு நின்றேன்  

பாலியல் தொழிலாளிகளோடு நின்றேன்

திருடர்களோடு நின்றேன்

பெண்களோடும் மூன்றாம்
பாலினத்தவரோடும் நின்றேன்

பிசாசுகளோடு நின்றேன்

இந்த கயிறு இழுக்கும் போட்டி
வரலாற்றில் முடிவுறாமல்
நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நான் நிற்கும் அணியில்தான்
முன்னைப் பழமையாய்
வள்ளுவர் நின்றார்.

ஔவை நின்றார்.

புத்தர் நின்றார்.

நீட்ஷே நின்றார்.

மார்க்ஸ் நின்றார்.

மாவோ நின்றார்.

பாரதி நின்றார்.

அம்பேத்கர் நி்ன்றார்.

பெரியார் நின்றார்.

நண்பர்களே இக்கயிறிழுக்கும்
போட்டியில் நீங்கள் எந்த அணி
தெரிந்தால்தான் நாம்
நண்பர்களாகவே இருக்க முடியும்.

No comments: