Tuesday, August 7, 2018

                         ஹிரோஷிமா!

73 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில்தான் ஹிரோஷிமா மீது 'எனோலா கே'  எனும் பி-29 ரக போர் விமானம் பறந்தது. அப்போது அந்த நகரின் காலை அழகாக மலர்ந்திருந்தது.
மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு நடுநிலைப் பள்ளியில் காலை வழி
பாட்டுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பேருந்து நிலையம்,வங்கிகள் இயல்பிலி
ருந்தன.பேருந்தில் தந்தைமடியிலிருந்த  குழந்தை தன் தாய்க்கு கையசைத்து விடைதந்தது.

ஒரு கணம்.ஒரேகணம். அவ்விமானத்தி
லிருந்து யுரேனியம் நிரம்பிய 'சின்னப் பையன்' எனும் அணுகுண்டு வீசப்பட்டது.
அந்நகரின் உயர்ந்த கட்டிடங்கள் பொடிப்
பொடியாய் உதிர்ந்தது.நகரம் ஒரு இடுகாடைப்போலானது.எங்கும் கதிரியக்கம்.மனிதர்கள் வாழ்ந்த சுவடின்றி நகரை இருளின் நிழல் கவ்வியது.

கூடவே Neccessary evil எனும் இன்னொரு விமானம்.இப்பேரழிவை புகைப்படமெடுத்து ஆவணமாக்கியது.

1,40,000   பேர் மாண்டு போனார்கள்.
எஞ்சியவர்கள் கதிர்வீச்சின் கொடும் விளைவால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் வீழ்ந்தனர்.
தேவையே இல்லாமல் நாகசாகியில் மீண்டும் ஒரு நாசகாரச் செயல்
பேரழிவை நிகழ்த்தி ஏகாதிபத்தியத்தின் மேலாண்மையை நிறுவிய முதல் சோதனை ஹிரோஷிமா.

வியட்நாம்,ஈராக்,ஆப்கானென
அணு அழிவுகள் தொடர்ந்து கொணடிருக்கின்றன.

அணு இல்லாத சமாதானம் நிறைந்த உலகம் எனும் கனவுக்கு அமெரிக்கா ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.

கெட்ட போரிடும் உலகை வேரோடுச் சாய்ப்பதே கவிதை கதை கலை இவற்றின் நோக்கமாக இருக்கமுடியும்.
ஹிரோஷிமா தனது கருப்புக் கதையை கண்ணீர் வழிய நம்மிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.நாம் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.மறந்து விடக்கூடாது.

இந்தியா அதன் வெகுசன விழைவு
களைக் கடந்து அமெரிக்காவின்
அணு அடிமையாக இருக்கிறது.
நாம் கருத்தளவிலாவது அணுவுக்கு 
எதிராக நிற்போம்.

இன்று ஹிரோஷிமா நினைவு தினம்.

Tuesday, May 15, 2018

போதும் என்றாலும்
இன்னொரு தோசை
ஊற்றப் போகும் அம்மா
போதும் என்றாலும்
தோளுக்கு மேல் வளர்ந்த மகனை
தலைக் குளிப்பாட்டும் அம்மா
போதும் என்றாலும்
கல்லூரி செல்லும் மகளுக்கும்
சோறுட்டி விடும் அம்மா
போதும் என்றாலும்
கொஞ்ச தூரம்
கூடவே  வரும் அம்மா
போதும் என்றாலும்
கூடுதலாய் பத்து ரூபாய்
சட்டைப்பையில் திணிக்கும் அம்மா
போதும் என்றாலும்
இப்போதும் விரதமிருக்கும் அம்மா
போதும் என்றாலும்
பேரன் பேத்திகளை
தூக்கித் திரியும் அம்மா
போதும் என்றாலும்
மருமகளுக்கு
முடியாமல் ஒத்தாசை செய்யும் அம்மா
இதோ...
தீவிர சிகிச்சை பிரிவில்
படுத்துக் கிடக்கிறாள்...
சுகவீனங்களையும்
கட்டணங்களையும்
மருத்துவர் எழுதிக் கொண்டிருக்க..
குழாய்களாலும் கம்பிகளாலும்
மானிட்டரோடு இணைக்கப்பட்டவள்
கண்களால் எனையழைத்து
கைகளால் போதும் என்கிறாள்.
அம்மாக்களை விடுதலை செய்யுங்கள்!

விளம்பர அம்மாக்கள் துணிகளை வெளுத்தபடி இருந்தார்கள். பிள்ளைகளுக்கு ஹார்லிக்ஸோ காம்ப்ளானோ கலந்து அவர்களை எருமைமாட்டைப் போல் வளர்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஆச்சி மசாலா மாகி நூடுல்ஸ்
ஆரோக்யா பால் கொடுத்து குழந்தைகளை கொழுக் மொழுக்காக்கிக் கொண்டிருந்தார்கள்.

சினிமா அம்மாக்கள் குடித்துவிட்டு பாதிராத்திரியில் வரும் பிள்ளைக்கு தோசை வார்த்துக்கொடுத்தார்கள்.

சீரியல் அம்மாக்கள் மருமகளுக்கு விஷத்தை வைத்துக் கொல்வதில் தோல்வியடைந்தவாறு இருந்தார்கள்.

இவர்கள் ஃபேஸ் ஃபவுண்டேஷன்
ஃபேஸ் பேக் போட்ட மேக்கப் அம்மாக்கள்.

இவர்களுக்கு வேர்வையில்லை. மூட்டுவலியில்லை.மாதவிடாயில்லை.
கனவுகளில்லை .காதலில்லை. ஆசைகளில்லை.

குழந்தைகளுக்கு சேவகம் செய்யப் பிறந்த வேலைக்காரிகளையே நமது பண்பாட்டு சாதனங்கள் அம்மாக்களென்றன!

கோபம் அதிகம்கொண்ட நம் ஈரோட்டுக்கிழவன் இதன்பொருட்டே கருப்பையை கழற்றி வீசியெறியச் சொன்னான். 

நாற்று நடும்போது வயல்வெளிகளில் குரலெடுத்து பாடத்தெரிந்த  சின்னப்பொண்ணுகள் நம் அம்மாக்களுள்ளிருந்தார்கள்.

வாசல் நிறைத்து கோலமெழுதிய அம்மாக்களிடமிருந்து நம்மால் ஒரு ஓவியரைக்கூட கண்டுபிடிக்க
முடியாமல் போனது.

முன்னிரவுகளில் கதை சொல்லி
வளர்த்த அம்மாக்களில் ஒரு லஷ்மி,
ஒரு சிவசங்கரி, ஒரு அம்பையை
அடையாளம் காணத் தவறினோம்.

குல்லாவும் ஸ்வெட்டரும்
பின்னியவர்களை மறுபடி பேரப்பிள்ளைகளுக்கும்
பின்னச்செய்தோம்.

வாழ்நாளெல்லாம் அம்மாவின்
வேர்வையைச் சுவைத்து
வெட்கமில்லாமல் வாழ்ந்து
செத்தபின்பு புகைப்படத்தில்
ஒரு செம்பருத்திப் பூ வைத்து பாசம் காட்டினோம்.

அம்மாக்களை அவர்கள் வைத்த வத்தக்குழம்புக்காக
மனைவியிடம் நினைவு கூர்ந்தோம்.

அம்மா என்பவளிடம்
ஒரு தோழி இருந்தாள்.
ஒரு காதலி இருந்தாள்.
ஒரு சண்டைக்காரி இருந்தாள்.
ஒரு ரோஷக்காரி இருந்தாள்.
ஒரு கலைமனம் கொண்டவள் இருந்தாள்.
அவர்களை அழித்தே  அம்மா செய்தோம்!

அம்மாவை வேர்வை இல்லாத
ஆசையில்லாத ஹார்மோன் இல்லாத இதயமில்லாத தெய்வமாக்கி தொழுதோம்.

குடிக்கும் மகன்களுக்கு
எப்போதாவது அம்மாவுக்கு
ஒரு வொய்ன் வாங்கித்தர
தோன்றியதே இல்லை.

எந்த மகனாவது அப்பாவை கட்டிக்கிறதுக்கு முன்பு உனக்கு காதல் இருந்ததா என்று கேட்டதே இல்லை.

நீங்கள் அம்மாவை
வேலைக்காரியாக நடத்தியிருந்தாலும் தெய்வமாக பூசையறையில் அடைத்திருந்தாலும் இரண்டுமே தவறு!

அம்மாக்கள் மனுஷிகள்.
நமது பண்பாடு அவர்களை
நிறையவே சிறைக் கம்பிகளை எண்ணவைத்திருக்கிறது.

'இந்த அப்பாவைப் போய் நீ ஏந்தாம் கட்டிக்கிட்டியோ?' என பிள்ளைகள்
தமிழைக் கிண்டல் செய்தபோது
ரசித்தவன் நான்.

பிள்ளைகளே!
உங்கள் பாசக்கூண்டுகளைத் திறந்து அம்மாக்களை விடுதலை செய்யுங்கள்.
                           மார்க்ஸ் 201


உற்பத்தி  பொருட்களின் உபரி மதிப்பு
தொழிலாளியின் வேர்வையிலிருப்பதை கண்டறிந்து உலகுக்குச் சொன்னவர் காரல் மார்க்ஸ்.

வெகுமக்களுக்கு கண்ணியமான வாழ்வைச் சமைக்கும் தீயில் எரிந்தவர்.
அதன் பொருட்டு இளம்வயது முதலே புத்தகங்களை எந்திரம் போல வாசித்துச் செரித்தவர்.நூல்களை தனது அடிமைகளாக்கியவர்.

முதலாளித்துவம் தனது நெருக்கடிகளிலி
ருந்து விடுபட காலமெல்லாம் அது உழைப்பாளியின் வசந்தத்தையே திருடியது.

பாட்டாளிகளை இணைத்து அரசியல்மயப்படுத்த ஏங்கல்ஸோடு சேர்ந்து உருவானது கம்யூனிஸ்ட் அறிக்கை. 'கம்யூனிசமெனும் பூதம் ஐரோப்பாவை ஆட்டிக்கொண்டிருக்கிறது' எனத்தொடங்கிய அச்சாசனம் உலக முதலாளிகளை குலை நடுங்கச் செய்தது.

நாடற்றுத் திரிந்த மார்க்ஸை வறுமை, நோய் வாட்டியது.குழந்தைகள் வரிசையாக இறந்தனர்.குழந்தைகள் பிறந்தபோது அவரால்  ஒரு தொட்டில் செய்ய முடியவில்லை.அவர்கள் இறந்த போது ஒரு சவப்பெட்டியும் வாங்க முடியவில்லை.அவரைப் புரிந்து இதயத்தில் தாங்கியவர்  ஜென்னி.
சிந்தனையில் தோள் சேர்ந்தவர் ஏங்கல்ஸ்.

பரந்துபட்ட மனிதத் திரள் சுயமரியாதை
யோடு சமத்துவமாக சனநாயகத்தோடு வாழ தனது வாழ்வின் காயங்களை வெளிச்சம் தரும் நிலவாக மாற்றியவர் மார்க்ஸ்.

நாடற்றவராகத் திரிந்தவாறு
மூலதனத்தை எழுதி முடித்தார்.தனது வாழ்வெங்கும் துயரங்களையேச் சந்தித்தவர் சோர்ந்து விடாமல் மனித குலம் துயரடையாதிருக்கும் தத்துவம் கண்டார்.

இன்றும் மனித விடுதலைக்கான
கைவிளக்காக மார்க்சியமே திகழ்கிறது.
இரண்டாயிரத்தில் உலகப்
பொருளாதாரம் தடுமாறியபோது போப்பாண்டவர் ஏசுநாதர் பார்த்துக்
கொள்வாரெனச் சொல்லவில்லை.
மாரக்ஸை நம்புவோம் என்றார்!

முதலாளித்துவத்தின் வலது
பிற்போக்குத்தனத்தால்   உருவான நெருக்கடிகள் வரலாற்றில்
ஹிட்லர், முசோலினி, ட்ரம்ப், மோடி போன்றோரை உருவாக்கின உருவாக்குகின்றன. இத்தகைய இருள்மதியாளர்களை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் எறிந்து எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கும் பொதுவுடமை அகிலத்தை உருவாக்கும் வலிமை மார்க்ஸ் கையளித்த தத்துவத்துக்கே இன்றும் இருக்கிறது.

மார்க்ஸின் 201 வது பிறந்த நாள் இன்று.

இப்போது நாம் நினைவுபடுத்திக்
கொள்ள ஒரு வாசகம் இருக்கிறது
'இழப்பதற்கு அடிமைச் சங்கிலியைத் தவிர ஒன்றுமில்லை.ஆனால் பெறுவதற்கோ ஒரு  பொன்னுலக
மிருக்கிறது!'

மார்க்ஸ் என்கிற மாமனிதர் வரலாற்றில் எப்போதோதான் தோன்றுவார்.

எத்தனித்தால் அவரை காலமெல்லாமல் உயிரோடு வைத்திருக்க நம்மால் முடியும்!
                   
இல்லறத் தேரின்
ஆரக்கால்களாய்
அச்சாணியுமாய்
இயைந்து ஓட இடும்
உயவு எண்ணையாய்
வாழ்க்கைச் சாலையின் எதிர்பாரா வளைவுகளில் தடுமாறாமல் வாகாய்ப் பிடிக்கக் கைப் பிடியாய்
முனைந்து இழுக்கும்
வடக் கயிறாய்
வேகம் தடுக்கும் கட்டையாய்
அழகாய்த் தெரியும்
கூரைத் துணியாய்
அசைந்தாடும் அழகுத் துணித் தூண்களாய்
நடுவே அமர்ந்து நம்மைப் பாலிக்கும்
நாயகியாகவுமிருக்கும்
நங்கை நல்லாளுக்கு நாளெல்லாம் திருவிழாதான்.
தனியே ஏன் ஒரு விழா.
                           மே-1


இவ்வுலகின் உறக்கத்தைச்
செய்தித்தாள் வீசி
கலைக்கிறான் ஒருவன்
இவ்வுலகின் சோர்வை நீக்க
தேநீர் தயாரிக்கிறான் ஒருவன்

இவ்வுலகின் எந்திரம் விசையுற
டீசல் நிரப்புகிறான் ஒருவன்
இவ்வுலகின் பற்சக்கரங்கள் சீராகச்
சுழல பசை நிரப்புகிறான் ஒருவன்

இவ்வுலகம் நனைந்துவிடாமலிருக்க
கூரை வேய்கிறான் ஒருவன்
இவ்வுலகின் பாதங்கள்
சுட்டுக் கொள்ளாதிருக்க
செருப்பு தைக்கிறான் ஒருவன்

இவ்வுலகின் கோணலை நேராக்கச் சுத்தியலால்  அடிக்கிறான் ஒருவன்
இவ்வுலகின் தேர்ச்சக்கரங்கள் சுழல சாலை அமைக்கிறான் ஒருவன்

இவ்வுலகின் வயிற்றுப் புண் ஆற
நுங்கு சீவுகிறான் ஒருவன்
இவ்வுலகின் நாற்றத்தைப் போக்க
மலமள்ளுகிறான் ஒருவன்

இவ்வுலகம்தான் அப்படிப் பெரிதாய்
இவர்களுக்கு என்ன தந்தது?

மானத்தையா?
கௌரவத்தையா?
மதிப்பையா?

பணத்தையா? வாழ்வையா?

இருமலைத் தந்தது
சாரயத்தைத் தந்தது

மனைவியின்
வசவைத் தந்தது
குழந்தைகளின்
ஏமாற்ற விழிகளைத் தந்தது
கல்யாணமாகாத
மகளைத் தந்தது
கடனைத் தந்தது
துக்கத்தைத் தந்தது

இறுதியாய்
ஒரு தூக்குக் கயிற்றைத்
தந்தது

இந்தப் பாழாய்ப் போன உலகுக்கு
நானேன் கவிதையைத் தரவேண்டும்
இதனடியில் ஒரு வெடிகுண்டை மட்டும்
வைத்துவிட்டுச் செல்கிறேன்.

மே தினத்தைக் கொண்டாட நியாமான ஒரு காரணமாவது இருக்கிறதா இன்று.