Tuesday, May 15, 2018

                           மே-1


இவ்வுலகின் உறக்கத்தைச்
செய்தித்தாள் வீசி
கலைக்கிறான் ஒருவன்
இவ்வுலகின் சோர்வை நீக்க
தேநீர் தயாரிக்கிறான் ஒருவன்

இவ்வுலகின் எந்திரம் விசையுற
டீசல் நிரப்புகிறான் ஒருவன்
இவ்வுலகின் பற்சக்கரங்கள் சீராகச்
சுழல பசை நிரப்புகிறான் ஒருவன்

இவ்வுலகம் நனைந்துவிடாமலிருக்க
கூரை வேய்கிறான் ஒருவன்
இவ்வுலகின் பாதங்கள்
சுட்டுக் கொள்ளாதிருக்க
செருப்பு தைக்கிறான் ஒருவன்

இவ்வுலகின் கோணலை நேராக்கச் சுத்தியலால்  அடிக்கிறான் ஒருவன்
இவ்வுலகின் தேர்ச்சக்கரங்கள் சுழல சாலை அமைக்கிறான் ஒருவன்

இவ்வுலகின் வயிற்றுப் புண் ஆற
நுங்கு சீவுகிறான் ஒருவன்
இவ்வுலகின் நாற்றத்தைப் போக்க
மலமள்ளுகிறான் ஒருவன்

இவ்வுலகம்தான் அப்படிப் பெரிதாய்
இவர்களுக்கு என்ன தந்தது?

மானத்தையா?
கௌரவத்தையா?
மதிப்பையா?

பணத்தையா? வாழ்வையா?

இருமலைத் தந்தது
சாரயத்தைத் தந்தது

மனைவியின்
வசவைத் தந்தது
குழந்தைகளின்
ஏமாற்ற விழிகளைத் தந்தது
கல்யாணமாகாத
மகளைத் தந்தது
கடனைத் தந்தது
துக்கத்தைத் தந்தது

இறுதியாய்
ஒரு தூக்குக் கயிற்றைத்
தந்தது

இந்தப் பாழாய்ப் போன உலகுக்கு
நானேன் கவிதையைத் தரவேண்டும்
இதனடியில் ஒரு வெடிகுண்டை மட்டும்
வைத்துவிட்டுச் செல்கிறேன்.

மே தினத்தைக் கொண்டாட நியாமான ஒரு காரணமாவது இருக்கிறதா இன்று.

No comments: