Tuesday, May 15, 2018

அம்மாக்களை விடுதலை செய்யுங்கள்!

விளம்பர அம்மாக்கள் துணிகளை வெளுத்தபடி இருந்தார்கள். பிள்ளைகளுக்கு ஹார்லிக்ஸோ காம்ப்ளானோ கலந்து அவர்களை எருமைமாட்டைப் போல் வளர்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஆச்சி மசாலா மாகி நூடுல்ஸ்
ஆரோக்யா பால் கொடுத்து குழந்தைகளை கொழுக் மொழுக்காக்கிக் கொண்டிருந்தார்கள்.

சினிமா அம்மாக்கள் குடித்துவிட்டு பாதிராத்திரியில் வரும் பிள்ளைக்கு தோசை வார்த்துக்கொடுத்தார்கள்.

சீரியல் அம்மாக்கள் மருமகளுக்கு விஷத்தை வைத்துக் கொல்வதில் தோல்வியடைந்தவாறு இருந்தார்கள்.

இவர்கள் ஃபேஸ் ஃபவுண்டேஷன்
ஃபேஸ் பேக் போட்ட மேக்கப் அம்மாக்கள்.

இவர்களுக்கு வேர்வையில்லை. மூட்டுவலியில்லை.மாதவிடாயில்லை.
கனவுகளில்லை .காதலில்லை. ஆசைகளில்லை.

குழந்தைகளுக்கு சேவகம் செய்யப் பிறந்த வேலைக்காரிகளையே நமது பண்பாட்டு சாதனங்கள் அம்மாக்களென்றன!

கோபம் அதிகம்கொண்ட நம் ஈரோட்டுக்கிழவன் இதன்பொருட்டே கருப்பையை கழற்றி வீசியெறியச் சொன்னான். 

நாற்று நடும்போது வயல்வெளிகளில் குரலெடுத்து பாடத்தெரிந்த  சின்னப்பொண்ணுகள் நம் அம்மாக்களுள்ளிருந்தார்கள்.

வாசல் நிறைத்து கோலமெழுதிய அம்மாக்களிடமிருந்து நம்மால் ஒரு ஓவியரைக்கூட கண்டுபிடிக்க
முடியாமல் போனது.

முன்னிரவுகளில் கதை சொல்லி
வளர்த்த அம்மாக்களில் ஒரு லஷ்மி,
ஒரு சிவசங்கரி, ஒரு அம்பையை
அடையாளம் காணத் தவறினோம்.

குல்லாவும் ஸ்வெட்டரும்
பின்னியவர்களை மறுபடி பேரப்பிள்ளைகளுக்கும்
பின்னச்செய்தோம்.

வாழ்நாளெல்லாம் அம்மாவின்
வேர்வையைச் சுவைத்து
வெட்கமில்லாமல் வாழ்ந்து
செத்தபின்பு புகைப்படத்தில்
ஒரு செம்பருத்திப் பூ வைத்து பாசம் காட்டினோம்.

அம்மாக்களை அவர்கள் வைத்த வத்தக்குழம்புக்காக
மனைவியிடம் நினைவு கூர்ந்தோம்.

அம்மா என்பவளிடம்
ஒரு தோழி இருந்தாள்.
ஒரு காதலி இருந்தாள்.
ஒரு சண்டைக்காரி இருந்தாள்.
ஒரு ரோஷக்காரி இருந்தாள்.
ஒரு கலைமனம் கொண்டவள் இருந்தாள்.
அவர்களை அழித்தே  அம்மா செய்தோம்!

அம்மாவை வேர்வை இல்லாத
ஆசையில்லாத ஹார்மோன் இல்லாத இதயமில்லாத தெய்வமாக்கி தொழுதோம்.

குடிக்கும் மகன்களுக்கு
எப்போதாவது அம்மாவுக்கு
ஒரு வொய்ன் வாங்கித்தர
தோன்றியதே இல்லை.

எந்த மகனாவது அப்பாவை கட்டிக்கிறதுக்கு முன்பு உனக்கு காதல் இருந்ததா என்று கேட்டதே இல்லை.

நீங்கள் அம்மாவை
வேலைக்காரியாக நடத்தியிருந்தாலும் தெய்வமாக பூசையறையில் அடைத்திருந்தாலும் இரண்டுமே தவறு!

அம்மாக்கள் மனுஷிகள்.
நமது பண்பாடு அவர்களை
நிறையவே சிறைக் கம்பிகளை எண்ணவைத்திருக்கிறது.

'இந்த அப்பாவைப் போய் நீ ஏந்தாம் கட்டிக்கிட்டியோ?' என பிள்ளைகள்
தமிழைக் கிண்டல் செய்தபோது
ரசித்தவன் நான்.

பிள்ளைகளே!
உங்கள் பாசக்கூண்டுகளைத் திறந்து அம்மாக்களை விடுதலை செய்யுங்கள்.

No comments: