Tuesday, May 15, 2018

                           மார்க்ஸ் 201


உற்பத்தி  பொருட்களின் உபரி மதிப்பு
தொழிலாளியின் வேர்வையிலிருப்பதை கண்டறிந்து உலகுக்குச் சொன்னவர் காரல் மார்க்ஸ்.

வெகுமக்களுக்கு கண்ணியமான வாழ்வைச் சமைக்கும் தீயில் எரிந்தவர்.
அதன் பொருட்டு இளம்வயது முதலே புத்தகங்களை எந்திரம் போல வாசித்துச் செரித்தவர்.நூல்களை தனது அடிமைகளாக்கியவர்.

முதலாளித்துவம் தனது நெருக்கடிகளிலி
ருந்து விடுபட காலமெல்லாம் அது உழைப்பாளியின் வசந்தத்தையே திருடியது.

பாட்டாளிகளை இணைத்து அரசியல்மயப்படுத்த ஏங்கல்ஸோடு சேர்ந்து உருவானது கம்யூனிஸ்ட் அறிக்கை. 'கம்யூனிசமெனும் பூதம் ஐரோப்பாவை ஆட்டிக்கொண்டிருக்கிறது' எனத்தொடங்கிய அச்சாசனம் உலக முதலாளிகளை குலை நடுங்கச் செய்தது.

நாடற்றுத் திரிந்த மார்க்ஸை வறுமை, நோய் வாட்டியது.குழந்தைகள் வரிசையாக இறந்தனர்.குழந்தைகள் பிறந்தபோது அவரால்  ஒரு தொட்டில் செய்ய முடியவில்லை.அவர்கள் இறந்த போது ஒரு சவப்பெட்டியும் வாங்க முடியவில்லை.அவரைப் புரிந்து இதயத்தில் தாங்கியவர்  ஜென்னி.
சிந்தனையில் தோள் சேர்ந்தவர் ஏங்கல்ஸ்.

பரந்துபட்ட மனிதத் திரள் சுயமரியாதை
யோடு சமத்துவமாக சனநாயகத்தோடு வாழ தனது வாழ்வின் காயங்களை வெளிச்சம் தரும் நிலவாக மாற்றியவர் மார்க்ஸ்.

நாடற்றவராகத் திரிந்தவாறு
மூலதனத்தை எழுதி முடித்தார்.தனது வாழ்வெங்கும் துயரங்களையேச் சந்தித்தவர் சோர்ந்து விடாமல் மனித குலம் துயரடையாதிருக்கும் தத்துவம் கண்டார்.

இன்றும் மனித விடுதலைக்கான
கைவிளக்காக மார்க்சியமே திகழ்கிறது.
இரண்டாயிரத்தில் உலகப்
பொருளாதாரம் தடுமாறியபோது போப்பாண்டவர் ஏசுநாதர் பார்த்துக்
கொள்வாரெனச் சொல்லவில்லை.
மாரக்ஸை நம்புவோம் என்றார்!

முதலாளித்துவத்தின் வலது
பிற்போக்குத்தனத்தால்   உருவான நெருக்கடிகள் வரலாற்றில்
ஹிட்லர், முசோலினி, ட்ரம்ப், மோடி போன்றோரை உருவாக்கின உருவாக்குகின்றன. இத்தகைய இருள்மதியாளர்களை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் எறிந்து எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கும் பொதுவுடமை அகிலத்தை உருவாக்கும் வலிமை மார்க்ஸ் கையளித்த தத்துவத்துக்கே இன்றும் இருக்கிறது.

மார்க்ஸின் 201 வது பிறந்த நாள் இன்று.

இப்போது நாம் நினைவுபடுத்திக்
கொள்ள ஒரு வாசகம் இருக்கிறது
'இழப்பதற்கு அடிமைச் சங்கிலியைத் தவிர ஒன்றுமில்லை.ஆனால் பெறுவதற்கோ ஒரு  பொன்னுலக
மிருக்கிறது!'

மார்க்ஸ் என்கிற மாமனிதர் வரலாற்றில் எப்போதோதான் தோன்றுவார்.

எத்தனித்தால் அவரை காலமெல்லாமல் உயிரோடு வைத்திருக்க நம்மால் முடியும்!

No comments: