Wednesday, June 26, 2019

யாரிவள்

மிகவும் ஒயிலாக
இந்தக் காலையில்
தன் ஸ்கூட்டியில்
டென்னிஸ் பயிற்சிக்கு விரைகிறாளே
அவளல்ல...

மாடித் தோட்டத்தில்
வளர்க்கும் வண்ணக் கிளிகளோடு
கொஞ்சிப் பேசுகிறாளே
அவளல்ல

காதில் ஒலிப்பானொடு
அருகிலுள்ள பூங்காவில் 
கைவீசி நடக்கிறாளே
அவளல்ல

வார இறுதியில்
எந்தத் திரைப்படம் போகலாமெனத்
தோழியோடு திட்டமிடுகிறாளே
அவளல்ல

தன் அம்மாவின் மடியமர்ந்து
கைக்கு மருதாணி
இட்டுக் கொண்டிருக்கிறாளே
அவளல்ல...

இந்தக் கவிதையை
இதோ தன் கைபேசியில்
வாசித்துக்  கொண்டிருக்கிறாளே
அவளுமல்ல.

பின் யாரவள் ...?

செங்கல் சுமப்பதற்கோ
நாற்று நடவுக்கோ
நூறு நாள் வேலைக்கோ
தெருக் குழாய் தண்ணீருக்கோ
ஐந்து ருபாய் ஷேர் ஆட்டோவுக்கோ
ஆசிட் பினாயில் விற்பதற்கோ...

தன் சிறகுகளை விரித்துப்
பறக்க முடியாமால் போனாலும்
கண்ணாடி வளையலோடு
பொன் தோற்றத்துக் கம்மலோடு
நடைபாதைக் கடை உடைகளோடு
விலையுயர்ந்த தன்னம்பிக்கை எனும் அழகோடு
நடந்து கொண்டிருக்கிறதே
ஒரு பறவை ... !!

வீடு வந்து அழைத்தும் கூட
அவள் திருமணத்திற்குத்தான்
நீங்கள் சென்றதே இல்லையே.

No comments: